அய்யப்பன் பூஜா சங்க மஹோத்ஸவம் கோலாகலம்; பட்டத்து யானை அணிவகுப்பில் பக்தர்கள் பரவசம்
கோவை; ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கத்தின், 74வது பூஜா மஹோத்ஸவ விழா, ஐந்தாம் நாளான நேற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க விமரிசையாக நடந்தது.ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் அனுக்கிரஹத்துடன் பூஜா வைபவங்கள், ராம்நகர் சத்தியமூர்த்தி சாலையிலுள்ள ஸ்ரீ அய்யப்பன்பூஜா சங்கத்தில், கடந்த நான்கு தினங்களாக நடந்து வருகிறது. பூஜா மஹோத்ஸவ விழாவின், 5ம் நாள் நேற்று காலை, 5:00 மணிக்கு சூர்ய நமஸ்கார பாராயணத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. வேதவிற்பன்னர்கள், சிவாச்சாரியர்கள், வேத ஆகம வல்லுனர்கள் இணைந்து, காலை 7:00 மணிக்கு ஸ்ரீ ருத்ராபிஷேகத்தையும், சண்முகார்ச்சனையையும் நிறைவேற்றினர். 8:30 மணிக்கு மஹாதீபாராதனை நடந்தது.9:00 மணிக்கு பஞ்சவாத்தியங்கள் முழங்க, பட்டம் சூட்டிய அலங்கரிக்கப்பட்ட யானை மீது பூரணகும்ப கலசங்களுடன் எழுந்தருளுவிக்கப்பட்டு, அய்யப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டது.திருவாபரணப்பெட்டியுடன் திருமஞ்சன உலா, மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக சத்தியமூர்த்தி சாலையில் துவங்கி, மீண்டும் அதே சாலையிலுள்ள அய்யப்ப பூஜா சங்கத்தை அடைந்தது. அங்கு சுவாமிக்கு புஷ்பாஞ்சலி நிறைவு செய்து, கனகாபிஷேகம் செய்யப்பட்டது. பகல் 1:00 மணிக்கு மஹா அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் 1:00 மணிக்கு மஹாதீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு பஞ்சவாத்தியம் முழக்கங்களுக்கிடையே, அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானை அணிவகுக்க, அலங்கரிக்கப்பட்ட அய்யப்பசுவாமி வாகனத்தில் எழுந்தருளிவிக்கப்பட்டு, பக்தர்கள் சூழ சத்தியமூர்த்தி சாலையிலிருந்து புறப்பட்டு, விவேகானந்தர், நேரு, ராஜாஜி, ராமர்கோவில், அன்சாரி வீதி, மீண்டும் ராமர் கோவில் வீதி வழியாக, சத்தியமூர்த்தி சாலையிலுள்ள அய்யப்பன் பூஜா சங்கத்தை அடைந்தது.வழி நெடுக பக்தர்களும், குழந்தைகளும் ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, ஸ்ரீ அய்யப்ப பூஜா சங்க தலைவர் கணேசன், செயலாளர் சுப்ரமணியம், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகக்குழுவினர் மற்றும் அங்கத்தினர்கள் செய்திருந்தனர்.