மேலும் செய்திகள்
புதிய ஆட்டோவில் பழுது: இழப்பீடு வழங்க உத்தரவு
08-Jul-2025
கோவை; கடன் வாங்கும் போது வங்கியில் கொடுத்த பத்திரத்தை வங்கி நிர்வாகம் தொலைத்து விட்டதால், அவற்றை ஒரு மாதத்திற்குள் திரும்பி கொடுக்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது. கோவை, மருதமலை ரோடு, பி.என்.புதுாரை சேர்ந்த சத்யன் என்பவர், வீடு கட்டுவதற்காக, வடவள்ளியிலுள்ள இந்தியன் வங்கியில் 2016, அக்., 17ல் கடன் வாங்கினார். கடன் வாங்கிய நாளில் இருந்து மாதந்தோறும் தவறாமல் தவணை தொகை செலுத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த 2019ல் சத்யன் இறந்தார். அதன் பிறகு, அவரது மனைவி வனிதா ரோஸி, தொடர்ந்து தவணை செலுத்தி வந்தார். 2024, மே, 4ல் நிலுவை தொகை முழுவதும் செலுத்தி வீட்டு கடன் கணக்கை முடித்தார். அதன் பிறகு, வங்கியில் கொடுத்த வீட்டு பத்திரத்தை வழங்குமாறு விண்ணப்பித்தார். ஆனால், பல மாதங்களாக வங்கிக்கு அலைந்தும், கடன் கணக்கை ரத்து செய்து ஆவணங்களை திருப்பி தராமல் கால தாமதம் செய்தனர். அதற்கான காரணம் குறித்து கேட்டபோது, பஞ்சாயத்து மற்றும் மாநகராட்சியால் வழங்கப்பட்ட கட்டட ஒப்புதல் அசல் மற்றும் சில ஆவணங்கள் தொலைந்து விட்டதாக வங்கி அதிகாரிகள் கூறினர். இதனால் அனைத்து ஒரிஜினல் ஆவணங்களை திருப்பி தரவும், இழப்பீடு வழங்க கோரியும், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வனிதா ரோஸி வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர்கள் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்குரிய ஆவணங்களை ஒரு மாதத்திற்குள் திருப்பி கொடுக்க வேண்டும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 75,000 ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.
08-Jul-2025