உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காரமடை ஒன்றிய ஊராட்சிகளில் நீர்நிலைகளில் குளிக்க தடை! அமீபா காய்ச்சல் முன்னெச்சரிக்கை

காரமடை ஒன்றிய ஊராட்சிகளில் நீர்நிலைகளில் குளிக்க தடை! அமீபா காய்ச்சல் முன்னெச்சரிக்கை

மேட்டுப்பாளையம்; கேரளாவில் அதிகரித்து வரும் மூளையை தின்னும் அமீபா காய்ச்சலின் எதிரொலியாக காரமடையில் உள்ள கேரள மாநில எல்லைகள் உஷார் படுத்தப்பட்டுள்ளது. மேலும் 17 ஊராட்சிகளில் உள்ள நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில், 'அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்' என்ற மூளையை தின்னும் அமீபா நோயினால் மூன்று மாத குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 15க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கேரள எல்லைப்பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. காரமடை அருகே உள்ள கோபனாரி, முள்ளி பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் மக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து காரமடை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் கூறுகையில், ''ஊராட்சிகளில் உள்ள நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. திறந்தவெளி நீர்நிலைகளில் கண்டிப்பாக யாரும் குளிக்க கூடாது. அதிக காய்ச்சல், தலைவலி வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்,'' என்றார். காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகையில் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளும் உஷார் படுத்தப்பட்டு, அங்கு காய்ச்சலுடன் வரும் நோயாளிகளில், நீண்ட நாள் காய்ச்சல் உள்ளவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்க பரிந்துரை செய்யப்படுகிறது. இதுகுறித்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா கூறுகையில், ''மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வரும் காய்ச்சல் நோயாளிகளிடம் அமீபா காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் உள்ளதா என பரிசோதனை செய்யப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் யாருக்கும் இந்த வகை காய்ச்சல் இல்லை. மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். காய்ச்சல், தலைவலி உள்ளவர்கள் அலட்சியமாக தானாக மருந்துகள் வாங்கி உட்கொள்ள வேண்டாம். உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி