பள்ளிகளில் காலை உணவு திட்ட ஏற்பாடு தயாரா இருக்கணும்!ஆய்வு செய்து உறுதிப்படுத்த அறிவுரை
சூலுார்: கடந்த தி.முக., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடர முடிவு செய்துள்ள தமிழக அரசு, இதற்கான முன்னேற்பாடுகளை செய்ய உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம், 2022ல் துவங்கப்பட்டது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால், மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக, மாநகராட்சிகள் முதல் ஊராட்சிகள் வரை அனைத்து பகுதிகளில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது; திட்டம், பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், காலை உணவு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் போது, காலை உணவு திட்டம், சத்துணவு திட்டத்தை செயல்படுத்த தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தையும் செய்ய, மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. வட்டாரம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில், பகுதி வாரியாக பொறுப்பு அலுவலர்களை நியமிக்கவும், சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு உரிய அறிவுரை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 'ஜூன் மாதத்தில், 21 வேலை நாட்களுக்கு தேவையான உணவு பொருட்கள் பட்டியல் தயாரிக்க வேண்டும். இருப்பில் உள்ள பொருட்கள் காலாவதியாக இருந்தால் அவற்றை திருப்பி அளிக்கவும், அதே அளவு பொருட்களை உரிய நிறுவனங்களில் இருந்து திரும்ப பெறவும் வேண்டும். உணவு சமைக்கும் இடம், உணவு பொருட்கள் இருப்பு வைக்கும் இடம், உணவு பரிமாறும் இடத்தை துாய்மைப்படுத்த வேண்டும். தண்ணீர் தொட்டிகள் துாய்மைப்படுத்தி, குளோரினேஷன் செய்ய வேண்டும். புகை போக்கிகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். சமையல் பாத்திரங்கள், காஸ் ஸ்ட்வ், சிலிண்டர் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இப்பணிகளை, பள்ளி துவங்குவதற்கு, ஏழு நாட்களுக்கு முன் முடித்திட வேண்டும். அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதை, அதற்குரிய அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகத்துக்கு உடனடியாக ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்' என உத்தரவிடப்பட்டுள்ளது.