கோவை : கேரளா உள்ளிட்ட பிற மாநில அரசு மருத்துவமனைகளைப் போல், தமிழக அரசு மருத்துவமனைகளிலும், தினமும் படுக்கை விரிப்புகளை மாற்ற வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், நோயின் தன்மைக்கு ஏற்ப, பலர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். நோய் குணமடையும் வரை, பல நாட்கள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இம்மருத்துவமனைகளில், பல நாட்களாக சலவை செய்யப்படாத படுக்கை விரிப்புகளே, பயன்படுத்தப்படுவதாக, நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.இதனால், ஒரு நோயாளியின் நோய் கிருமிகள், அடுத்ததாக வரும் நோயாளி மற்றும் அவருடன் வரும் பார்வையாளர்களுக்கும், பரவ வாய்ப்புள்ளது. இதனால், படுக்கை விரிப்புகளை தினமும் சலவை செய்து பயன்படுத்த வேண்டும் என, நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.கேரள மாநிலத்தில், இதேபோன்ற சர்ச்சை ஏற்பட்டதால், தற்போது அங்கு அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் படுக்கை விரிப்புகளில், கிழமைகளின் பெயர் அச்சிடப்பட்டுள்ளன.அந்தந்த கிழமைகளுக்கு ஏற்றார் போல், படுக்கை விரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நடைமுறை, பல மாநிலங்களிலும் பின்பற்றப்படுகிறது. இந்நடைமுறையை, தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை, பொதுமக்கள் மத்தியில் வலுத்துள்ளது.சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழக அரசு மருத்துவமனைகளில், உள்நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். அவர்களுக்கு தினமும் படுக்கை விரிப்புகள் சலவை செய்துதான் வழங்கப்படுகின்றன. இருப்பினும், சில நேரங்களில் பயன்படுத்தப்பட்ட படுக்கை விரிப்புகளை, சலவை செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.அதன் காரணமாக, இரு தினங்கள் அவற்றை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். பெரும்பாலும் சலவை செய்த படுக்கை விரிப்புகளே பயன்படுத்தப்படுகின்றன. 'தினமும் படுக்கை விரிப்புகள் மாற்றப்படுவதை, மருத்துவமனை நிர்வாகங்கள் கண்காணித்து, உறுதிப்படுத்த வேண்டும்' என்றார்.