தேனீ பெட்டி கையாள அறிவுரை
பெ.நா.பாளையம் : தேனீ பெட்டிகளை கவனத்துடன் கையாளுவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.இது குறித்து, முன்னோடி விவசாயிகள் கூறுகையில், தேனீக்களிடம் கொட்டு வாங்காமல் பெட்டிகளை ஆய்வு செய்ய சில யுக்திகளை கடைபிடிக்க வேண்டும்.அதிக காற்று, மழை, பனி உள்ள நேரங்களிலும், இரவு நேரங்களிலும் பெட்டியை திறக்க கூடாது. நுழைவு வழியை மறைத்து நிற்க கூடாது. அடை சட்டங்களை எடுக்கும்போதும், அடைச்சட்டங்களை மீண்டும் வைக்கும் போதும், தேனீக்கள் நசுங்கி சாக விடக்கூடாது. தேனீக்கள் கொட்ட வரும்போது கைகளை தலையை சுற்றி வீசி தடுத்தல், அடை சட்டங்களை வீசி எறிந்து விட்டு ஓடுதல் கூடாது.தேனீக்கள் கருப்பு நிறத்தை ஆபத்தாக கருதுகின்றன. எனவே, கருப்பு நிற ஆடைகளை அணிந்து திறக்கக் கூடாது. ஆய்வு செய்பவர் வாசனை திரவியங்கள், தைலங்கள், ஷாம்பூ போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. ஆய்வு செய்பவரின் உடலில் இருந்து வேர்வை நாற்றம் வெளிப்படக் கூடாது. அளவுக்கு அதிகமாக புகையை பயன்படுத்தக் கூடாது. புகையை உருவாக்க செயற்கை இழை கொண்டு உருவாக்கப்பட்ட கிழிந்த துணிகளையோ அல்லது ரப்பர் பொருட்களையோ பயன்படுத்தக் கூடாது. சூடான புகையை பயன்படுத்தக் கூடாது. தேனீ பெட்டிகளை தேவையில்லாமல் அடிக்கடி திறந்து பார்க்கக் கூடாது என, முன்னோடி விவசாயிகள் அறிவுரை கூறினர்.