உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேருதான் ஸ்மார்ட் சிட்டி! சிறுமழைக்கு கூட பெரிய அட்ராசிட்டி: கழிவுநீரால் நிறையுது குடிநீர் தொட்டி

பேருதான் ஸ்மார்ட் சிட்டி! சிறுமழைக்கு கூட பெரிய அட்ராசிட்டி: கழிவுநீரால் நிறையுது குடிநீர் தொட்டி

- நமது நிருபர் குழு-மாநகரில் போதிய மழைநீர் வடிகால் வசதி இல்லாததால், சிறிதுநேர மழைக்கே ரோடுகளில் மழை நீர் குளம்போல் தேங்கியது. பல குடிநீர் தொட்டிகளில் சாக்கடை கழிவு நீர் கலந்ததால், பொதுமக்கள் அல்லல்படுகின்றனர்.கோவை மாநகராட்சி பகுதிகளில் சிறிதுநேரம் மழை பெய்தாலே லங்கா கார்னர், கிக்கானி ரயில்வே பாலம், அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி என, போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களில், மழைநீர் சூழ்வது தொடர்கதையாக உள்ளது.

வடிகால் வசதி இல்லை

மழைநீர் வடிகால் வசதி போதியளவில் இல்லாத நிலையில், பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக, விடுபட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் அமைக்கவும், ஏற்கனவே இருக்கும் வடிகால்களை மேம்படுத்தவும் மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கென, 'கன்சல்டன்ட்' நிறுவனம் வாயிலாக, இரு ஆண்டுகளுக்கு முன்பு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய மண்டலம், 31வது வார்டு காமராஜபுரம் உட்பட ஐந்து முக்கிய இடங்களில், ரூ.13.22 கோடியில் மழைநீர் வடிகால் பணிகளும் நடந்துள்ளன.இருப்பினும் 'கட்' ரோடுகள், குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில், மழைநீர் வடிகால் வசதி போதியளவில் இல்லாததால், ரோட்டில் இன்னும் மழைநீருடன், கழிவுநீர் கலந்து பெருக்கெடுக்கும் அவலம் தொடர்கிறது. நேற்று மதியம், 2:10 மணி முதல், 15 நிமிடங்களுக்கு மழை கொட்டித் தீர்த்தது.

ஊர்ந்த வாகனங்கள்

தொடர்ந்து, ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்தது. இம்மழையால் கிக்கானி ரயில்வே பாலத்தில் மழைநீர் சூழ, கடக்க முயன்ற கார் ஒன்று சிக்கிக்கொண்டது. சாயிபாபாகோவில் அருகே மெயின் ரோட்டில், மழைநீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் ஊர்ந்து சென்றனர்.ஆர்.எஸ்.புரம், புலியகுளம், கணபதி போன்ற இடங்களிலும் இதேநிலைதான். இங்கு மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளிலும், மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். ஆர்.எஸ்.புரம், 73வது வார்டு, பி.எம்.சாமி காலனி இரண்டாவது வீதியில், 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கழிவுநீர் 'ரிவர்ஸ்' எடுத்து, வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக அங்கு வசிப்போர் குமுறுகின்றனர்.

குடிநீரில் கலந்த கழிவுநீர்

அப்பகுதி மக்கள் கூறுகையில், 'எங்கள் குடியிருப்புகளில் இருந்து செல்லும் பாதாள சாக்கடை இணைப்பு, முத்தண்ணன் குளம் அருகே மேடான வழித்தடத்தில் செல்கிறது. இதனால், அப்பகுதியில் சேகரமாகும் கழிவுநீரும் ரிவர்ஸ் எடுத்து, எங்கள் வீட்டு கழிவறைக்குள் வருகிறது. இன்று(நேற்று) பெய்த மழைக்கு, குடிநீர் தொட்டிக்குள் கழிவுநீர் கலந்த, மழைநீர் புகுந்து விட்டது' என்றனர்.மழைநீர் வடிகால் முறையாக கட்டப்படாதது, இருக்கும் வடிகால்களை துார்வாராதது, ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஆகியவையே, சாலைகளில் மழைநீர் தேங்க காரணம். கனமழை பெய்யும் முன், போர்க்கால அடிப்படையில் இப்பணிகளை மாநகராட்சி முடுக்கி விட வேண்டும்.

பொதுமக்கள் மகிழ்ச்சி

ஒருபுறம் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டாலும், மற்றொரு புறம் நகரில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த வெப்பம் தணிந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நேற்று முன்தினம் இரவு முதல், கோவையின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று மதியம் நகரின் பல்வேறு பகுதிகளிலும், கருமேகம் திரண்டு மழை கொட்டியது.கோவை, விஸ்வாசபுரம், கணபதி, கணபதி மாநகர், விளாங்குறிச்சி, சேரன் மாநகர், ஹோப்ஸ் காலேஜ், பீளமேடு, லட்சுமி மில்ஸ், ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம், ரத்தினபுரி, திருச்சி ரோடு, சூலுார் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை கொட்டியது. உஷ்ணத்தை விரட்டும் வகையில், பெய்த மழை காரணமாக, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை