வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மனம் விட்டு பொறுமையாக அமர்ந்து பேசினால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு நிச்சயம் .....
கோவை: கோவை மாவட்ட சமூகநலத்துறை குடும்ப வன்முறை தடுப்பு பிரிவின் கீழ், கடந்த நான்கு மாதங்களில், 120 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், அடிப்படை புரிதல் இன்றி, சிறு பிரச்னைகளுக்காக வரும் இளம் தம்பதிகள் அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.சமூகநலத்துறையின் கீழ், கோவை மற்றும் பொள்ளாச்சியில், 'ஒன் ஸ்டாப் சென்டர்' செயல்பட்டு வருகிறது. இதன் வாயிலாகவும், போலீஸ் தரப்பிலும், நேரடியாகவும், மக்கள் குறைத்தீர் முகாம் வாயிலாகவும், புகார்கள் பெறப்படுகின்றன.கடந்த ஜன., மாதம் முதல் தற்போது வரை, 120 குடும்ப வன்முறை சார்ந்த புகார்கள் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோன்று பெறப்படும் புகார்களில், அதிகளவில் இளம் தம்பதியினர் உள்ளனர். மொபைல் போனும் காரணம்
தற்போதைய தொழில்நுட்ப உலகில், தொழில்நுட்பங்களுடன் அதிக நேரம் செலவிடும், இளைய தலைமுறையினர் மத்தியில் புரிதல், சகிப்புத்தன்மை என்பது பெரிதாக இல்லை என, விசாரணை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அம்பிகா கூறியதாவது:குடும்ப வன்முறை பிரிவில், கடந்த ஜன., முதல் தற்போது வரை, 120 புகார்கள் வந்துள்ளன. புகார்களின் தன்மையை பொறுத்து விசாரணை மேற்கொள்ளப்படும். புகார் பெறப்பட்டதும் சம்மன் அனுப்பப்பட்டு, இரண்டு தரப்பினரிடையேயும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். பேசினால் சரியாகி விடும்
குடும்ப வன்முறை புகார்களில், 10, 15 ஆண்டுகள் ஆனவர்களை விட, பத்து நாட்கள், ஆறு மாதங் களே ஆன திருமண பந்தத்தில் உள்ளவர்களை, அதிகம் காணமுடிகிறது. இதுபோன்ற புகார்களின் அடித்தளம் ஒரு சிறு பிரச்னையாகத்தான் இருக்கிறது. அதை பேசி தீர்க்காமல், பிரச்னையை பெரிதாக்கி விவாகரத்து வரை சென்றுவிடுகின்றனர். பெற்றோர் கவனத்துக்கு
பெற்றோர், திருமணமாகவுள்ள தங்கள் பிள்ளைகளுக்குஅறிவுரை வழங்க வேண்டும். திருமணம் ஆன சமயத்தில், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள காலஅவகாசம் தேவை. வேறுபாடுகள் என்பது இயல்பானது என்பதை சொல்லி அனுப்பாமல், பிள்ளைகளுக்கு ஆதரவாக இருந்து பிரச்னைகளை பெரிதாக்குவது கூடாது.இதில் பாலின பாகுபாடு இல்லை. இருவருக்கும் அறிவுரை கூறவேண்டியது அவசியம். மொபைல் போன்களே, பல பிரச்னைகளுக்கு அடித்தளம். இதனை சரியாக கையாள வேண்டியது அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார். 181க்கு அழைக்கலாம்!
நிஜமாகவே, குடும்ப வன்முறையில் சிக்கும் பெண்கள் தயக்கமின்றி, 181 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். 181 என்பது, பெண்களுக்கான ஒன் ஸ்டாப் சென்டர் எண். இதில், எவ்வித புகாராக இருப்பினும் பதிவு செய்யலாம். இதில் பதிவு செய்யப்படும் புகார்களுக்கு, தீர்வு காணும் வரை கண்காணிப்பு தொடரும். கோவை ஒன் ஸ்டாப் சென்டருக்கு, கடந்த நான்கு மாதங்களில் 385 புகார்களும், பொள்ளாச்சி சென்டரில் 128 புகார்களும், பதிவு செய்யப்பட்டுள்ளன. கோவையில் 2018 செப்., முதல் 2025 தற்போது வரை, 3,536 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விசாரணை அலுவலர்கள் எதிர்கொண்ட புகார் அனுபவங்களில் இருந்து...!n தம்பதிகளுக்கு இடையில் பிரச்னைகள் இயல்பானது. திரைப்படங்களை பார்த்து, ஒரு வித கற்பனையில் திருமணம் செய்வது கூடாதுn தகராறு வரும்போது, ஒருவருக்கு ஒருவர் பழி சொல்வதை தவிர்த்தால், பிரச்னை பெரிதாவதை தவிர்க்கலாம்n முடிந்துபோன பிரச்னைகளை, ஒவ்வொரு சண்டையின் போதும் தொடர்வது கூடாதுn அவசியம் இன்றி, மூன்றாம் நபரை பிரச்னைக்குள் அனுமதிக்க கூடாதுn படுக்கை அறைக்கு வெளியில், மொபைல் போனை வைத்து செல்வது, தற்போது மிக அவசியம். பலர் பேசிக்கொள்ளவே நேரமில்லாமல் போவதற்கு, மொபைல் பயன்பாடே காரணம்.n சிறிய பாராட்டுக்கள், சிரிப்புகள் எப்போதும் இருக்க வேண்டும். ஒருவர் பேசும் போது, காது கொடுத்து கேட்கவேண்டியது அவசியம்n இப்போதைய காலகட்டத்தில் வேலைகளை, ஆண்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும்n மொபைல் போன் பயன்பாட்டில், பிரைவசி அவசியம்தான். அதீத பிரைவசி தேவையற்ற சந்தேகங்களுக்குவழிவகுக்கும். பாஸ்வேர்டு வைப்பதில் ஒளிவு மறைவு கூடாது
மனம் விட்டு பொறுமையாக அமர்ந்து பேசினால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு நிச்சயம் .....