பாரதியார் பல்கலை பேட்மின்டன் : அசத்தும் பெண்கள் அணியினர்
கோவை : பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான 'பேட்மின்டன்' போட்டியில் பெண்கள் அணியினர் அசத்தி வருகின்றனர்.பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே, பெண்களுக்கான 'பேட்மின்டன்' போட்டிகள், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று துவங்கியது; நாளை நிறைவடைகிறது. இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.'நாக்-அவுட்' முறையில் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்றைய போட்டியில் டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில், ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரி அணியையும், ஜி.வி.ஜி., பெண்கள் கல்லுாரி, 2-0 என்ற செட் கணக்கில், கோவை அரசு கலைக் கல்லுாரியையும் வென்றன.கோபி அரசு கலைக் கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் புராவிடன்ஸ் பெண்கள் கல்லுாரியையும், சசூரி கலை அறிவியல் கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் கொங்கு கலை அறிவியல் கல்லுாரி அணியையும் வென்றன. தொடர்ந்து போட்டிகள் நடந்துவருகின்றன.