காமராஜர் அறக்கட்டளை வாயிலாக கல்வி உதவித்தொகை; விண்ணப்பிக்க பாரதியார் பல்கலை அறிவுறுத்தல்
கோவை; காமராஜர் அறக்கட்டளையில் இருந்து கல்வி உதவித்தொகை பெற தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, கோவை பாரதியார் பல்கலை தெரிவித்துள்ளது.மாநில அரசால் கோவை பாரதியார் பல்கலையில், காமராஜர் அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. இவ்வறக்கட்டளை, ரூ.25 லட்சத்தில் துவங்கப்பட்டது. இதிலிருந்து பெறப்படும் வட்டியில் இருந்து அரசு, அரசு உதவி பெறும், பல்கலை என, மூன்று பிரிவுகளில், தலா, 15 மாணவர்கள் என, தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.இத்திட்டம் வாயிலாக ஏழை மாணவர்கள் பயனடைய வழிவகை பிறந்தது. இத்திட்டம், முறையாக செயல்படுத்தப்படவில்லை என, புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பல்கலை நிர்வாகம் தற்போது இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, வரும், டிச., 6ம் தேதிக்குள் இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக அனைத்து கல்லுாரிகளும், தகுதியான மாணவர்களை தேர்வு செய்து அவர்கள் விண்ணப்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லுாரி முதல்வர்கள், அறிவியல், கணிதம், சமூக அறிவியல், வணிகவியல், மேலாண்மை மற்றும் கலை ஆகிய பாடப்பிரிவுகளில், தரவரிசையின் படி, இளநிலையில், முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவர்களை விண்ணப்பிக்க வைக்க வேண்டும். ஆண்டுதோறும் மாணவரின் தகுதி, நன்னடத்தை, மதிப்பெண் அடிப்படையில் உதவித் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இளநிலை, இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள், முதுநிலை இரண்டாமாண்டு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்.பில்., பி.எச்டி., மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பத்தை பல்கலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.