உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிதியின்றி தள்ளாடுது பாரதியார் பல்கலை! வைப்பு நிதியில் கை வச்சாச்சு

நிதியின்றி தள்ளாடுது பாரதியார் பல்கலை! வைப்பு நிதியில் கை வச்சாச்சு

கோவை; கடுமையான நிதி பற்றாக்குறைக்கு தள்ளப்பட்டுள்ள பாரதியார் பல்கலை, வேறு வழியின்றி வைப்பு நிதியை பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளது. காலியாக உள்ள துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்களை விரைந்து நிரப்பினால் மட்டுமே, பல்கலையில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.கோவையில், 1,000 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள பாரதியார் பல்கலையின் கீழ், கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள, 133 இணைப்புக் கல்லுாரிகள் உள்ளன.பல்கலையில், 39 துறைகள், 54 முதுநிலை கல்வி, எம்.பில்., பி.எச்டி., கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. 3,000க்கு அதிகமான முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் படிக்கின்றனர்.சிறந்த கல்வியாளர்களால் கட்டமைக்கப்பட்டு, திறமைமிக்க துணைவேந்தர்களால், வளர்க்கப்பட்ட தொன்மைமிக்க இந்த பல்கலை, இன்று தனது பொலிவை இழந்து வருகிறது. நீண்டநாட்களாக துணைவேந்தர் இல்லாததே, தள்ளாட்டத்தின் துவக்கம்.2022 அக்., முதல் துணைவேந்தர் இல்லை. இதுதவிர, பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், உட்பட, 300க்கும் அதிகமான பணியிடங்கள் ஆண்டுக்கணக்கில் காலியாகவுள்ளன.இதன் காரணமாக, நிர்வாக சீர்கேடு தலைவிரித்தாடுகிறது. நிர்வாகமின்மை, முறையற்ற மேலாண்மை, ஊழல் அதிகம். இதன் காரணமாக, பல்கலையில் நிதி பற்றாக்குறை இன்று தவிர்க்க முடியாததாகி விட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு கூட, நிதியின்றி பல்கலை தள்ளாடி வருகிறது. இதையடுத்து, பல்கலையின் வைப்பு நிதி(கார்பஸ் பண்ட்) பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஊழியர்களின் ஊதியமும், இந்த வைப்பு நிதியில் இருந்துதான் எடுத்து வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.மிக, மிக அத்தியாவசியங்களுக்கு மட்டும் பயன்படுத்தவே வைப்பு நிதி சேமிக்கப்படுகிறது. அப்படியிருக்கும் நிலையில், அந்த நிதியை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதில் இருந்தே, பல்கலையின் நிதி நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை அறிய முடியும்.பெயர் வெளியிட விரும்பாத பேராசிரியர் ஒருவர் கூறுகையில், 'துணைவேந்தர் பணியிடம் காலியான பின், பல்கலையின் பல்வேறு துறைகளிலும், ஊழல் அதிகரித்து விட்டது. சரியான நிர்வாகமின்மையால் பல்கலையின் நிதி முறையாக செலவழிக்கப்படுவதில்லை. தொடர்ந்து இதேபோல், நடந்து வருவதால், நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதே நிலை நீடித்தால், பல நுாறு கோடி ரூபாய் வைப்பு நிதியையும் ஆறு மாதங்களுக்குள் காலி செய்து விடுவர். அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, பல்கலையை காக்க வேண்டும்' என்றார்.பல்கலை பதிவாளர்(பொறுப்பு) ரூபாவிடம் இது குறித்து கேட்டதற்கு, ''பல்கலையில் நிதி பற்றாக்குறை இல்லை. அனைத்தும் முறையாக நடந்து வருகிறது. பல்கலை மீது அவதுாறு பரப்ப வேண்டும் என, சிலர் இதுபோன்ற தகவல்களை வெளியிடுகின்றனர்,'' என்றார்.புகார் உண்மையோ இல்லையோ... சரியான தலைமை இல்லாவிட்டால் எங்கும் இதே நிலைதான் என்பதை உணர்ந்து, தாமதிக்காமல் துணைவேந்தர் நியமனத்தை துரிதப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

kalyanasundaram
ஜூன் 19, 2025 15:24

Persons intellegence like few DNK third rate workers who used to paste advt, and wall posters will shortly be appinted as advisers


சாமானியன்
ஜூன் 11, 2025 16:28

பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளில் வேறு ஏதோ மோசமான நிலைமை நிலவுகின்றது. கவர்னர் காப்பாற்ற வேண்டும். நல்லவரை திறமைமிக்கவரை துணைசான்சிலராக தேர்வு செய்து நிலைமையை சமாளிக்க வேண்டும். இதுபற்றி அண்ணாமலை பேசாதது வியப்பளிக்கிறது.


சமீபத்திய செய்தி