பாரதியார் பல்கலை வாலிபால் அணி தேர்வு; மூன்று மண்டலங்களில் போட்டிகள் துவக்கம்
கோவை; பாரதியார் பல்கலை வாலிபால் அணி வீரர்கள் தேர்வுக்கு, மூன்று மண்டலங்களில் இன்றும், நாளையும் போட்டிகள் நடக்கின்றன.திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலையில், தென் மண்டல பல்கலைகளுக்கு இடையே ஆண்களுக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி வரும், 18 முதல், 22ம் தேதி வரை நடக்கிறது. இதற்கென, 14 பேர் அடங்கிய அணி, பல்கலைகளில் இருந்து அனுப்பிவைக்கப்படுகிறது.பாரதியார் பல்கலையில் இருந்து, அணி தேர்வு செய்யப்படாததால், வீரர்களிடையே குழப்பம் நிலவியது. இது குறித்து, 'விளையாட்டு வீரர்கள் வாழ்வில் விளையாட்டு' என்ற தலைப்பிலான செய்தி, நமது நாளிதழில் நேற்று வெளியானது.இதையடுத்து, இன்றும், நாளையும் மூன்று மண்டலங்களில், வாலிபால் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, பி-மண்டலத்துக்கான போட்டி, கோவை அரசு கலை அறிவியல் கல்லுாரியிலும், சி-மண்டலத்துக்கான போட்டி, பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில் நடக்கிறது.'டி'-மண்டலத்துக்கான போட்டி ஈரோடு, இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிக கல்லுாரியிலும் நடக்கிறது. இந்த மண்டலங்களில் வெற்றி பெறும் அணிகள், வரும், 14, 15ம் தேதிகளில் மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகளில் பங்கேற்கின்றன. இதிலிருந்து, சிறந்த வீரர்கள் பல்கலை வாலிபால் அணிக்காக தேர்வு செய்யப்பட உள்ளனர்.