காதலி வீட்டில் தற்கொலை செய்த வாலிபரின் பைக் திருட்டு
கோவை: கோவை, மதுக்கரை ரோடு கிறிஸ்தவர் காலனியைச் சேர்ந்தவர் மனோஜ். இவர் சாய்பாபா காலனியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். கடந்த மாதம் 14ம் தேதி மனோஜ், மது போதையில் தனது காதலி வீட்டிற்கு சென்றார்.அங்கு அவருக்கும், காதலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. மனோஜ் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அன்றைய தினம், தனது விலை உயர்ந்த பைக்கை சிவானந்தா காலனி, ஹட்கோ காலனி, 5வது வீதியில் நிறுத்தி விட்டு, காதலி வீட்டிற்கு சென்றுள்ளார்.தற்கொலைக்கு பின், மனோஜின் பைக் சில நாட்கள் அங்கு நின்றிருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர், அந்த பைக்கை திருடி சென்றுள்ளார். பைக் திருட்டு போனது குறித்து, மனோஜின் சகோதரி சினேகா, 25, ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, பைக்கை தேடி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் பைக் திருட்டு போனது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.