உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டு வீட்டுக்கு ரூ.1 லட்சம் சொத்து வரி விதித்த பில் கலெக்டர் சஸ்பெண்ட்

ஓட்டு வீட்டுக்கு ரூ.1 லட்சம் சொத்து வரி விதித்த பில் கலெக்டர் சஸ்பெண்ட்

கோவை; கோவை, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு எட்டாவது வீதியில், ஓட்டு வீட்டில் வசிப்பவர் பழனிசாமி, 76; காவலாளி. 'ட்ரோன்' மூலம் மாநகராட்சி வருவாய் பிரிவினர், இவரது வீட்டு பரப்பை அளவீடு செய்தனர். முன்புறத்தில் 'மெஸ்' நடத்தப்படுகிறது; கடைசி பகுதியில் சமையல் கூடம் செயல்படுகிறது. அதனால், மொத்த இடத்தையும் வணிக பகுதியாக கணக்கிட்டு, சொத்து வரி மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.இதன்படி, ஆறு மாதத்துக்கு ஒருமுறை, 51 ஆயிரத்து, 322 ரூபாய் சொத்து வரி; குப்பை வரி ரூ.300, அபராத கட்டணம் ரூ.1,050 சேர்த்து, ஒரு தவணைக்கு மொத்தம், 52 ஆயிரத்து, 732 ரூபாய் செலுத்த வேண்டும்.ஓராண்டுக்கு ஒரு லட்சத்து, 5,464 ரூபாய் செலுத்த வேண்டுமென மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடர்பாக, நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கைக்கு மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார். மாநகராட்சி துணை கமிஷனர் குமரேசன் விசராணை நடத்தினார்.ஓட்டு வீடு அமைந்துள்ள இடத்தில், சொத்து வரி விதிப்புகள் ஏராளமாக உள்ளன. ஒவ்வொரு சொத்து வரி விதிப்பையும் தனித்தனியாக கணக்கிடாமல், 'ட்ரோன்' சர்வே அடிப்படையில், மொத்த பரப்புக்கும் வரியை உயர்த்தி, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து, நோட்டீஸ் வழங்கியிருப்பது தெரியவந்தது.பணியில் அலட்சியமாக இருந்ததால், 'ட்ரோன்' அளவீடு செய்த சமயத்தில், அப்பகுதிக்கு பில் கலெக்டராக இருந்த ஜெய்கிருஷ்ணன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். தற்போது பில் கலெக்டராக உள்ள ஆனந்த்பாபு, மத்திய மண்டல உதவி வருவாய் அலுவலர் கிருபாகரன் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு 'மெமோ' கொடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !