பவானி நதிநீர் பாதுகாப்பு குழு அமைக்க பா.ஜ., முடிவு
மேட்டுப்பாளையம் ; மாசடைந்து வரும் பவானி நதியை பாதுகாக்க பா.ஜ., சார்பில் காரமடையில் ஆலோசனை கூட்டம், வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் விக்னேஷ் முன்னிலை வகித்தார்.இதுகுறித்து, துணை தலைவர் விக்னேஷ் கூறுகையில் ''பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பவானி ஆற்றில் நகராட்சி கழிவு நீர், தொழிற்சாலை கழிவு நீர் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கலப்பதால், ஆறு மாசடைந்து வருகிறது. குறிப்பாக ஆலாங்கொம்பு, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக் காலமாக தொடர்ந்து பவானி ஆறு மாசடைந்து, அப்பகுதி பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. பவானி ஆறு மாசடைவதை தடுக்க பா.ஜ., களத்தில் இறங்கி செயல்பட முடிவு செய்துள்ளது. அதற்காக 'பவானி நதிநீர் பாதுகாப்பு குழு' ஏற்படுத்தப்பட்டு, கிராமங்கள் தோறும் பவானி ஆறு மாசு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.---