பா.ஜ., நிர்வாகிக்கு வெட்டு கடை ஊழியருக்கு வலை
கோவை: பா.ஜ., நிர்வாகியை அரிவாளால் வெட்டிய கடை ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை, காளப்பட்டியை சேர்ந்தவர் அஜய், 36; பா.ஜ., மண்டல துணை தலைவர். இவரது வீடு அருகே, தென்மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் மளிகை நடத்துகிறார். இவரது கடையில், நாகராஜன் என்பவர் பணிபுரிகிறார். வேல்முருகன், அஜய் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், வேல்முருகன் சில நாட்களுக்கு முன், சொந்த ஊருக்கு சென்றார். கடையில் பணிபுரியும் நாகராஜன், வீட்டில் இருந்து வெளியே வந்த அஜய் உடன், நேற்று தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அஜயை வெட்டினார். இதில், கையில் பலத்த காயம் அடைந்த அஜய், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர். வேல்முருகனுக்கும், அஜய்க்கும் முன்விரோதம் இருந்த நிலையில், நாகராஜன் எதற்காக அஜய்யை வெட்டினார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.