போலியாக பில் எழுதி கைத்தறி சங்கங்களில் மோசடி; ஆய்வு நடத்த பி.எம்.எஸ்., வலியுறுத்தல்
கோவை; தமிழக கைத்தறி கூட்டுறவு சங்கங்களில், நுால் வாங்கியதாகவும், துணி உற்பத்தி செய்ததாகவும் போலியாக பில் எழுதி, அரசு வழங்கிய மானியத் தொகையை முறைகேடாக பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மாநில அளவில் அனைத்து சங்கங்களிலும் விசாரணை நடத்தினால், எத்தகைய முறைகேடு நடந்திருக்கிறது என்பது தெரியவரும் என, பி.எம்.எஸ்., கைத்தறி பிரிவு வலியுறுத்தியுள்ளது.தமிழக கைத்தறி துறையின் கீழ் செயல்படும், அனைத்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்களுக்கு அரசு வழங்கிய தள்ளுபடி மானியத்தில், மூன்று சதவீதத் தொகையை, கூட்டுறவு சங்க அதிகாரிகள் லஞ்சமாக பெற்றது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சமீபத்தில் கோவையில் நடத்திய சோதனையில் கண்டறியப்பட்டது.வதம்பச்சேரி ஸ்ரீராமலிங்க சூடாம்பிகா பருத்தி மற்றும் பட்டு தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலக மேலாளர் சவுண்டப்பனிடம் இருந்து, 15 லட்சத்து, 89 ஆயிரத்து, 950 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.இவ்விவகாரத்தில், நுால் கொள்முதல் செய்யாமலும், துணி உற்பத்தி செய்யாமலும் கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் போலி பில் சமர்ப்பித்து, தள்ளுபடி மானியத்தை அரசிடம் இருந்து மோசடியாக பெற்றிருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. அவ்வாறு வழங்கும் தள்ளுபடி மானியத்தில் இருந்து, மூன்று சதவீதம் லஞ்சமாக உயரதிகாரிகள் வசூலித்திருக்கின்றனர்.இதுதொடர்பாக, பாரதிய மஸ்துார் யூனியன் (பி.எம்.எஸ்.,) கைத்தறி பிரிவு மாநில தலைவர் நடராஜன் கூறியதாவது:கைத்தறி கூட்டுறவு சங்கங்களில், பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. நுால் வாங்கியதாகவும், துணி விற்பனை செய்ததாகவும் போலி பில்கள் தயாரித்து, அரசின் மானியத்தொகையை பெற்று மோசடி செய்கின்றனர்.கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் இருப்புக்கும், கடனுக்கும் பெரிய வித்தியாசம் காணப்படுகிறது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு எந்தெந்த கூட்டுறவு சங்கங்கள் சேலை வழங்கியது; எந்தெந்த சங்கங்கள் வழங்கவில்லை என்கிற விபரத்தை அறிந்து, அதை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட சங்கங்களில் ஆய்வு செய்தால், நுால் கொள்முதல், துணி உற்பத்தி நடந்திருக்கிறதா என கண்டறியலாம்.தமிழகம் முழுவதும் உள்ள, அனைத்து கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் பதிவேடுகளை ஆய்வு செய்து, இருப்பு நிலவரம் மற்றும் மானியம் பெற்றது தொடர்பாக விசாரணை நடத்தினால், அதிகாரிகள் மோசடி செய்திருப்பது வெளிச்சத்துக்கு வரும்.இவ்வாறு, அவர் கூறினார்.