தண்ணீரை காய்ச்சி குடியுங்க!
மேட்டுப்பாளையம்; பவானி ஆற்று நீர், மண் கலந்து செந்நிறமாக வருவதால், குடிநீரை காய்ச்சி குடிக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட ஜடையம்பாளையம், பெள்ளேபாளையம், இலுப்பநத்தம். இரும்பொறை, மூடுதுறை, சின்னக்கள்ளிப்பட்டி ஆகிய ஊராட்சிகளிலுள்ள 114 கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க, குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கு நீராதாரமாக சிறுமுகை அருகே உள்ள மூலையூரில், பவானி ஆற்றின் அருகே கிணறு அமைத்து, அதில் இருந்து மின் மோட்டார் வாயிலாக தண்ணீர் எடுத்து, குழாய் வாயிலாக பால்காரன் சாலையில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, அங்கு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு 2.35 லட்சம் லிட்டர் தண்ணீர், நீர் தேக்கத் தொட்டியில் நிரப்பப்படுகிறது. இதில் இருந்து 8 குடிநீர் சேகரிப்புத் தொட்டிகளுக்கு தண்ணீர் உந்தப்பட்டு, மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் வாயிலாக ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையத்தில் பெய்து வரும் மழை காரணமாக பவானி ஆற்று நீர் மண் கலந்து செந்நிறமாக செல்கிறது. இதனால் கிராமங்களில் குடிநீரை காய்ச்சி குடிக்க மக்களுக்கு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர்.---