பணிநீக்கம் செய்தவர்களுக்கு போனஸ்: டாஸ்மாக் ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
கோவை: டாஸ்மாக் பணியாளர்களுக்கு, 20 சதவீத போனஸ் வழங்கியதை போல், தற்காலிக பணிநீக்கம் செய்த பணியாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும் என்று, கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம், சி.ஐ.டி.யு., வலியுறுத்தியுள்ளது. டாஸ்மாக் நிறுவனம் ஊழியர்களுக்கு 2024-- 2025 ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸாக, 20 சதவீத தொகையை வழங்கியது. கோவை வடக்கு டாஸ்மாக் மாவட்டத்தில், 128 கடைகளும், தெற்கு மாவட்டத்தில், 156 கடைகள் உள்ளன. இதில் 1,350 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இப்பணியாளர்கள் வாங்கும் மாத சம்பளத்தின் அடிப்படையில், 20 சதவீத போனஸ் கணக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் தொகை, தற்காலிகமாக பணிநீக்கம் செய்த பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை. கோவை வடக்கு மற்றும் தெற்கு டாஸ்மாக் மாவட்டங்களில் மட்டும், 20 க்கும் மேற்பட்டவர்கள் அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் இருக்கின்றனர். அத்தொழிலாளர்களின் குடும்பங்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாட, உதவ வேண்டும் என்று கலெக்டரிடம், டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.