ஹாக்கி போட்டியில் பி.பி.ஜி., அணி சாம்பியன்; குமரகுரு கல்லுாரி அணி இரண்டாம் இடம்
கோவை ; அண்ணா பல்கலை ஆண்கள் ஹாக்கி போட்டியில் பி.பி.ஜி., கல்லுாரி அணி, குமரகுரு கல்லுாரி அணியை வென்று 'சாம்பியன்ஷிப்' பெற்றது.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே(11வது மண்டலம்) ஆண்களுக்கான ஹாக்கி போட்டிகள் குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியில் இரு நாட்கள் நடந்தது. இதில், ஏழு கல்லுாரி அணிகள் பங்கேற்றன.முதல் போட்டியில், பி.பி.ஜி., கல்லுாரி அணி, 3-0 என்ற கோல் கணக்கில் எஸ்.என்.எஸ்., ஐ.டி., அணியை வென்றது. தொடர்ந்து, யு.ஐ.டி., கல்லுாரி அணி, 5-0 என்ற கோல் கணக்கில் எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி அணியையும் வீழ்த்தியது.அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணி, 3-1 என்ற கோல் கணக்கில் அண்ணா பல்கலை மண்டல மையம் அணியை வென்றது. பல்வேறு போட்டிகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில், பி.பி.ஜி., கல்லுாரி அணி, யு.ஐ.டி., கல்லுாரி அணியை, 1-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.இரண்டாம் அரையிறுதியில், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணி, 3-0 என்ற கோல் கணக்கில் அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்றது. பரபரப்பான இறுதிப்போட்டியில், பி.பி.ஜி., கல்லுாரி அணியும், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணியும் மோதின. இதில், 4-3 என்ற கோல் கணக்கில் பி.பி.ஜி., கல்லுாரி அணி வெற்றி பெற்றது. யு.ஐ.டி., கல்லுாரி அணி, 3-0 என்ற கோல் கணக்கில் அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணியை வீழ்த்தி மூன்றாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, குமரகுரு கல்லுாரி முதல்வர் எழிலரசி, உடற்கல்வி இயக்குனர் நிர்மலா தேவி ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.