வார்டு பணிக்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்க பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில் பேச்சு
கோவை; கோவை மாநகராட்சியின், 2025-26ம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்ட அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யும் சிறப்பு கூட்டம், விக்டோரியா ஹாலில் நாளை (28ம் தேதி) மதியம், 12:00 மணிக்கு நடக்கிறது. இதுதொடர்பாக, மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்களிடம் ஏற்கனவே ஆலோசனை பெறப்பட்டது. மாமன்ற அரசியல் கட்சி கவுன்சில் குழு தலைவர்கள் கருத்து கேட்பு கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர், மா.கம்யூ., - இ.கம்யூ., - ம.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அ.தி.மு.க., புறக்கணித்தது.கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது:இ.கம்யூ., கவுன்சில் குழு தலைவர் சாந்தி: சொத்து வரியை குறைக்கக்கோரி, திருப்பூர் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதேபோல், சொத்து வரியை குறைப்பதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும். திட்டச்சாலைகளை உருவாக்க வேண்டும். மழைநீர் வடிகால்களை துார்வாருவதற்கு, வார்டுக்கு, 10 பேர் வீதம் தொழிலாளர்கள் நியமிக்க வேண்டும். தேவையான இடங்களில் புதிதாக கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும். விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை கட்ட வேண்டும்.காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி: சொத்து வரி உயர்வை, 50 சதவீதமாக குறைக்க வேண்டும். ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். பில்லுார் 3வது திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மாலை நேர படிப்பகங்கள் வார்டுதோறும் கட்ட வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைப்பதுபோல், மழைநீரை சேமிக்கும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் தொட்டி கட்ட வேண்டும். நல்ல வெளிச்சம் தரக்கூடிய, எல்.இ.டி., தெருவிளக்குகளை பொருத்த வேண்டும்.ம.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் சித்ரா: வார்டுக்கு ஒதுக்கும் நிதியை, ஒரு கோடி ரூபாயாக அதிகரிக்க வேண்டும். அனைத்து வார்டுகளுக்கும் நிதி பங்கீடு சரிசமமாக இருக்க வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில், விளையாட்டு மைதானங்கள் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
'பரதநாட்டியம் கற்றுக்கொடுங்க'
கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி கூறுகையில், ''மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தனித்திறன் கற்றுக்கொடுக்கும்போது, அதற்கு தேவையான உபகரணங்கள் வாங்கித் தர வேண்டும். மாணவியருக்கு பரதநாட்டியம் கற்றுத்தர வேண்டும். உள்விளையாட்டு அரங்கம் அமைத்துத் தர வேண்டும். மோசமாக உள்ள மாநகராட்சி கட்டடங்களை சீரமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான பூங்காக்களை அனைத்து மண்டலங்களிலும் உருவாக்க வேண்டும். தானமாக நிலம் கொடுக்கும் பகுதிகளில் திட்டச்சாலைகள் உருவாக்க வேண்டும்,'' என்றார்.
'மழைநீர் தேங்கக் கூடாது'
வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் கூறுகையில், ''மழை பெய்தால், வடக்கு மண்டலங்களில் 28 இடங்களில் தேங்குகிறது. மூன்று இடங்களில் பாலங்கள் கட்டி, தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்டலத்துக்கு ஓரிடம் தேர்வு செய்து, விளையாட்டு மைதானம் உருவாக்கித் தர வேண்டும். சிறிய அளவிலான குடிநீர் பாட்டில்களை விழாக்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர். அவற்றை முறைப்படுத்த வேண்டும். மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு, அடையாள அட்டை மற்றும் பெல்ட் அவசியம் வழங்க வேண்டும்,'' என்றார்.