பில்டு எக்ஸ்கான் கட்டுமான கண்காட்சி துவங்கியது
கோவை: கோவை மாவட்ட அனைத்துக் கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம் (காட்சியா) சார்பில், கொடிசியா வளாகத்தில் மூன்று நாள் 'பில்டு எக்ஸ்கான்'கட்டுமான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நேற்று துவங்கியது.கருத்தரங்கை, இந்திய கட்டுநர்கள் சங்க தேசிய தலைவர் விஸ்வநாதன், எம்.பி., ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி ஆகியோர் துவக்கி வைத்தனர்.காட்சியா தலைவர் விஜயகுமார், கண்காட்சி தலைவர் செவ்வேல் ஆகியோர் கூறியதாவது: கண்காட்சியில் 163 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிரானைட், செங்கல், கான்கிரீட் கட்டுமான மூலப்பொருட்கள், உபகரணங்கள், கதவு, யூ.பி.வி.சி., கட்டுமான ரசாயனங்கள், பயோ செப்டிக் டேங்க், முறுக்குக் கம்பிகள், டைல்ஸ், உள் மற்றும் வெளி அலங்காரப் பொருட்கள், விளக்குகள், வயரிங், பெயின்டிங், பிளம்பிங் என, கட்டுமானம் சார்ந்த அனைத்துத் துறை தொடர்பாகவும் ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன.இந்தக் கண்காட்சி துறைசார்ந்த இன்ஜினீயர்கள், இன்ஜி., மாணவர்கள், பொதுமக்கள், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் என அனைவருக்கும் பயனுடையதாக இருக்கும்.கட்டுமானத் துறையில் தினம்தோறும் நவீன தொழில்நுட்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றைத் தெரிந்து கொள்ள இதுபோன்ற கண்காட்சிகள் உதவியாக இருக்கும்.கண்காட்சியைப் பார்வையிட அனுமதி இலவசம். திடக்கழிவு மேலாண்மை, கட்டுமானப் பொருட்களின் தரக்கட்டுப்பாட்டின் அவசியம் உட்பட தினமும் கட்டுமானத் துறைசார்ந்து, கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.மக்கள் தங்கள் சந்தேகங்களுக்கு, நிபுணர்களிடம் இலவச ஆலோசனை பெறலாம். கண்காட்சி, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறும். கண்காட்சியைப் பார்வையிடும் அனைவருக்கும் மரக்கன்று இலவசமாக வழங்கப்பட உள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.