உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மெதுவாக நடைபெறும் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள்

 மெதுவாக நடைபெறும் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் புதிதாக கட்டப்படும், பஸ் ஸ்டாண்ட் பணிகள், மெதுவாக நடைபெறுகின்றன. இதனால் பயணிகள் பாதிப்பு அடைகின்றனர். மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் கட்டி, 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அதனால் புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்ட, நகர் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பப்பட்டது. தமிழக அரசு, மேட்டுப்பாளையத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட, எட்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணிகள் கடந்தாண்டு துவங்கியது. பஸ்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்லாமல், பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதியில், பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். தற்போது கோவை, திருப்பூர், சத்தியமங்கலம் ஆகிய பஸ்கள் நிற்கும் பகுதியில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. திருப்பூர் பஸ்கள் நின்ற இடத்தில் இருந்த கடைகளை காலி செய்து இடித்தனர். அதற்கு பதிலாக பஸ் ஸ்டாண்ட் மற்றொரு பகுதி வளாகத்தில் உள்ள, காலி கடைகளுக்கு மாற்றி விட்டனர். மேலும் கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், ஒரே இடத்தில் நிறுத்துவதால், இட நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பயணிகள் பஸ்களில் ஏறுவதற்கு மிகுந்த சிரமம் அடைகின்றனர். பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என, நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன், கடந்த நான்கு மாதங்களுக்கு முன் கூறினார். ஆனால் கட்டுமான பணிகள் மிகவும் மெதுவாக, ஆமை வேகத்தில் நடைபெறுவதால், பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகள் முழுமை அடையாமல் உள்ளன. பஸ் ஸ்டாண்ட் கட்டி முடிக்க இன்னும், நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு மேலாகும் என, கடை வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ