முழு வேலை நிறுத்தம் பங்கேற்க அழைப்பு
அன்னுார்; வருகிற 9ம் தேதி நடைபெறும் முழு வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தர கோரி துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.மத்திய, மாநில அரசு துறைகளில் உள்ள பல லட்சம் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட உரிமைகள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கங்கள் தேசிய அளவில் வருகிற 9ம் தேதி முழு வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தரும்படி கோரி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம், வருவாய்த்துறை அலுவலகம் ஆகியவற்றில் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.'வரும் 9ம் தேதி முழு வேலை நிறுத்தத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வெல்ல வேண்டும்,' என பிரச்சாரத்தில் தெரிவித்தனர்.