உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கும் உரிமம் வெளிப்படையாக டெண்டர் கோரி வழங்கலாமே

வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கும் உரிமம் வெளிப்படையாக டெண்டர் கோரி வழங்கலாமே

கோவை : கோவை அரசு பொருட்காட்சிக்கு வரும் வாகனங்கள் நிறுத்த, கட்டணம் வசூலிப்பதற்கான உரிமம், வெளிப்படைத்தன்மையோடு டெண்டர் கோரி வழங்க வேண்டுமென்கிற கோரிக்கை, ஒப்பந்ததாரர்களிடம் எழுந்துள்ளது.கோவை வ.உ.சி., மைதானத்தில், அரசு பொருட்காட்சி, மே 1ல் துவக்கி வைக்கப்படுகிறது. அரசின் திட்டங்களை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் ஒவ்வொரு துறை சார்பிலும் அரங்குகள் அமைக்கப்படுகின்றன.இவை தவிர, உணவு அரங்குகள் தனியாகவும், பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் ராட்டினங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. கோடை விடுமுறை காலத்தில் பொருட்காட்சி நடத்தப்படுவதால், தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வர். அவர்களது வாகனங்கள் நிறுத்த தனி இடம் ஒதுக்கப்படும்.வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணம் வசூலிக்கும் உரிமம், டெண்டர் கோரப்பட்டு வழங்குவது வழக்கம். நடப்பாண்டு இதில், ஆளுங்கட்சியினர் தலையீடு இருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. அதை தவிர்க்கும் வகையில், வெளிப்படைத்தன்மையோடு, டெண்டர் கோரி, அதிகபட்ச ஏலம் கோருபவருக்கு, வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் உரிமம் வழங்க வேண்டுமென, ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.ஏனெனில், வ.உ. சி., மைதானம் மாநகராட்சிக்கு சொந்தம் என்பதால், மாநகராட்சி சார்பில் நாளிதழ்களில் டெண்டர் விளம்பரம் வெளியிட்டு, அதிகபட்ச ஏலம் கோருபவருக்கு வழங்குவது வழக்கம். இம்முறை மைதானத்தை, முழுமையாக மாவட்ட நிர்வாகம் வசம் ஒப்படைத்து விட்டது. அதனால், வாகன நிறுத்துமிடத்துக்கான டெண்டரை, மாவட்ட நிர்வாகம் இறுதி செய்ய இருக்கிறது. இவ்விஷயத்தில், நேர்மையாக செயல்பட வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி