கலெக்டர் அலுவலகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு
கோவை: பிங்க் அக்டோபர் மாதத்தை முன்னிட்டு, பி.எஸ்.ஜி., மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைத்துறை மற்றும் கோவை கேன்சர் பவுண்டேஷன் சார்பில், நகரின் பல்வேறு இடங்களில் இலவசமாக பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. கோவை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களுக்கு, நடத்தப்பட்ட முகாமில், பி.எஸ்.ஜி., மருத்துவமனையின் பெண்களுக்கான புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஸ்ருதி மற்றும் கோவை கேன்சர் பவுண்டேசன் முதுநிலை ஆலோசகர் பூர்ணிமா குமார் சிறப்புரை நிகழ்த்தினர். பங்கேற்ற பெண்களுக்கு, பி.எஸ்.ஜி., மருத்துவமனை சார்பாக, 'தெர்மல் ஸ்கிரீனிங்' தொழில்நுட்பம் மூலமாக, மார்பக புற்றுநோய் அறிகுறிகளுக்கான ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. கதிர்வீச்சு பாதிப்பற்ற, பரிசோதனை கருவி தொடுதலற்ற, பாதுகாப்பான முறையில் செய்யப்படும் இந்த பரிசோதனை, கோவை மாவட்டத்திலேயே முதன்முறையாக, பி.எஸ்.ஜி., மருத்துவமனையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.