புற்றுநோய் பரிசோதனை ஒருங்கிணைக்க திட்டம்
கோவை; அரசு மருத்துவமனைகளுக்கு, பரிந்துரைக்கப்படும் புற்றுநோய் அறிகுறி உள்ளவர்களுக்கு ஒருங்கிணைந்து விரைந்து, பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் பெண்களுக்கும், வாய் புற்றுநோய் ஆண்களுக்கும், முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் திட்டம் கடந்த, 12ம் தேதி முதல், கோவை உட்பட 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்நல மையங்களில், பிற அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை மேற்கொள்பவர்களில், அறிகுறிகள் ஏதேனும் இருப்பின், கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். அவ்வாறு பரிந்துரைக்கப்படுபவர்கள், சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையில் உள்ள துறைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். துறைவாரியாக அல்லாமல், அனைவருக்கும் ஒரே இடத்தில் விரைந்து குறிப்பிட்ட தினங்களில் பரிசோதனை மேற்கொள்ள, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறுகையில், ''கடந்த, 12ம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்துகொள்ள, களப்பணியாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர். அறிகுறி இருப்பவர்கள் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். தற்போது இத்திட்டம் துவங்கியுள்ளதால், செயல்பாடுகள் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்,'' என்றார்.