நீர்நிலைகளில் பல்வேறு கழிவு குவிப்பதை தடுக்கவே முடியாதா?: கடும் நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள ரோடுகள், நீர்நிலைகளில், காலாவதியான மற்றும் பயன்படுத்திய பொருட்களை மூட்டை, மூட்டையாக வீசிச் செல்கின்றனர். இதனால், நீர் மாசுபடுவதுடன்,சுகாதாரம் பாதிக்கும் சூழல் உள்ளது.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை உள்ளிட்ட தாலுகாக்கள் உள்ளன. அதில், பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட 118 ஊராட்சிகள் உள்ளன. துர்நாற்றம்
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள, பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள கிராமங்கள், கழிவுகள் கொட்டும் இடமாக மாறியுள்ளன. கேரளாவில் இருந்து கழிவுகள் கொண்டு வரப்பட்டு கிராமப்புற ரோட்டோரங்களில் வீசப்படுகின்றன.இவை கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளன. மேலும், கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில், மீன் கழிவுநீர் திறந்து விட்டபடியே செல்லுதல் போன்ற சம்பவங்களும் அரங்கேறுகின்றன.இதை அவ்வப்போது பொதுமக்கள் பிடித்து போலீசார், ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி பகுதிகளில் நீர்நிலைகள், ரோட்டோரங்கள் கழிவுகளை கொட்டுமிடமாக மாறி வருகின்றன. மக்கள் எதிர்ப்பு
ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணா குளம் அருகே, கடந்த சில நாட்களுக்கு முன் காலாவதியான இலந்தவடை, சாக்லெட், ஊறுகாய் போன்றவை மூட்டை, மூட்டையாக வீசப்பட்டன.அவை அனைத்தும் காலாவதியான பொருட்களாக இருந்தன.பெரிய கடைகளில் இருந்து, இரவோடு, இரவாக கொண்டு வந்து அந்த பொருட்கள் வீசப்பட்டுள்ளன. அதனால், அப்பகுதியில் துர்நாற்றம் நிலவுகிறது.அதே போன்று, பொள்ளாச்சி தேவம்பாடி வலசு குளம் அருகே கடந்த வாரம், வாகனத்தில் இருந்து எச்சில் இலைகள், வேஸ்ட் சோபா செட் பஞ்சுகளை கொட்ட முயற்சித்தனர். கிராம மக்கள், வாகனம் மற்றும் ஆட்களை மடக்கிப்பிடித்து வாக்குவாதம் செய்தனர். கழிவுகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து, எச்சரிக்கை விடுத்து, அந்த கழிவுகளை அவர்களே மீண்டும் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. தொடரும் இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. பொறுப்பற்ற செயல்
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பொள்ளாச்சி கிராமங்களில் கட்டட கழிவுகள், பயன்படுத்திய, பயன்பாடு இல்லாத பொருட்களை கொட்டுவதை ஒரு சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர்.மேலும், கடைக்காரர்கள் முழுமையாக குப்பையை தரம் பிரித்து அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களின் துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்காமல், இவ்வாறு வீசிச் செல்வது பொறுப்பற்ற செயலாக உள்ளது.உள்ளாட்சி நிர்வாகங்களும், கழிவுகள் கொட்டுவதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. வாகனங்களில் என்ன கொண்டு வருகின்றனர் என்பதை போலீசாரும் கண்காணிப்பது இல்லை.இதனால், கழிவுகள் மூட்டை, மூட்டையாக குவிப்பது வாடிக்கையாகியுள்ளது.நீர்நிலைகளில் கொட்டுவதால் நீர் மாசுபடுவதுடன்; நீரை குடிக்கும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உள்ளாட்சி நிர்வாகங்கள், போலீசாருடன் இணைந்து இதுபோன்று கழிவுகளை வீசிச் செல்வோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுகளை திறந்த வெளியில் வீசாமல் இருக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.