உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பஸ்களில் இலவச பயணம் செய்ய முடியல! பழங்குடியின பெண்கள் ஏமாற்றம்

அரசு பஸ்களில் இலவச பயணம் செய்ய முடியல! பழங்குடியின பெண்கள் ஏமாற்றம்

வால்பாறை : அரசு பஸ்களில் இலவச பயணம் செய்ய முடியாமல், பழங்குடியின பெண்களும், எஸ்டேட் பெண் தொழிலாளர்களும் தவிக்கின்றனர்.தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டம் சமவெளிப்பகுதியில் தான் முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது.வால்பாறை மலைப்பகுதியில் பல்வேறு போராட்டங்களுக்கு பின் கடந்த, ஆறு மாதங்களாக அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.ஆனால், சில எஸ்டேட் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அரசு போக்குவரத்துக்கழகம் அனுமதி மறுத்துள்ளது. இதனால், இந்தப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின பெண்கள், தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டில், வாட்டர்பால்ஸ், காடம்பாறை, வேவர்லி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. மேலும், இந்த வார்டில், மரப்பாலம், கருமுட்டி, மேல்ஆழியாறு, காடம்பாறை, வெள்ளிமுடி உள்ளிட்ட பல்வேறு செட்டில்மென்ட் பகுதிகளும் உள்ளன.காடம்பாறையில் இருந்து, பொள்ளாச்சிக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் பழங்குடியின பெண்கள் இலவமாக பயணம் செய்ய அனுமதி இல்லை. அதேபோல், வாட்டர்பால்ஸ், வேவர்லி எஸ்டேட் பகுதியை சேர்ந்த பெண்கள், வால்பாறை - பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் அரசு பஸ்களில், இலவசமாக பயணம் செய்ய அனுமதிப்பதில்லை.இதனால், இலவச பயணம் செய்ய அரசு அனுமதி வழங்கியும், பஸ்களில் பயணம் செய்ய முடியாததால், பழங்குடியின பெண்கள், பெண் தொழிலாளர்கள் விரக்தியடைந்துள்ளனர்.எனவே, காடம்பாறை, வாட்டர்பால்ஸ், அட்டகட்டி, வேவர்லி பகுதியில் வசிக்கும் பெண்கள் பயன்பெறும் வகையில், வால்பாறையிலிருந்து காலை, மாலை நேரங்களில் பஸ் இயக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, கூறினார்.

புகார் கொடுத்தாச்சு!

வால்பாறை நகராட்சி ஒன்றாவது வார்டு கவுன்சிலர் செல்வக்குமாரிடம் கேட்டபோது, 'வாட்டர்பால்ஸ், வேவர்லி, அட்டகட்டி, மேல்ஆழியாறு, காடம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்கள், தமிழக அரசின் இலவச பஸ் பயண திட்டத்தில் பயன்பெற முடியவில்லை.இப்பகுதிக்கு, 'மப்சல்' பஸ் இயக்கப்படுவதால், பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிப்பதில்லை. இது குறித்து மாவட்ட கலெக்டர் முதல் அமைச்சர் வரை புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அடுத்த கட்டமாக, தமிழக முதல்வரிடம் மனு கொடுக்கவுள்ளோம்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ