உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்சாதனங்களில் கவனம் தேவை

மின்சாதனங்களில் கவனம் தேவை

கோவை: வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கவுள்ள சூழலில், வீடுகள், வெளியிடங்களில் மின்சாதனங்களை கையாளும் போது கவனமாக இருக்கவேண்டும் என மின்வாரியத்துறை கோவை மண்டல தலைமைபொறியாளர் சுரேஷ்குமார் எச்சரித்துள்ளார். மின்வாரியத்துறை சார்பில், மின்சாதன பொருட்கள், கம்பங்கள், கம்பிகள், பிற தளவாட பொருட்கள் போதுமான அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மின்விபத்துகளை தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, கோவை மண்டல தலைமை பொறியாளர் சுரேஷ்குமார் கூறியதாவது: மின்சார்ந்த புகார்களை எதிர்கொள்ள, கோட்டம், உட்கோட்ட அளவிலும், குழு தயார்நிலையில் உள்ளன. பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு கருவிகளும் மரக்கிளைகளை அகற்றும் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. மழை நேரங்களில் மின்ஒயர்கள், மின்கம்பங்கள், பகிர்வு பெட்டிகள், இழுவை கம்பிகள் அருகே செல்லக்கூடாது. வீட்டில் மின்சாதனங்களில் அதிர்வுகளை உணர்ந்தால், உடனடியாக ரப்பர் காலணிகளை அணிந்துகொண்டு அனைத்துவிட்டு மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கவேண்டும். இடி, மின்னல் நேரங்களில் மின்கம்பிகள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை அருகில் நிற்பதை தவிர்க்கவேண்டும். டி.வி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி, போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். அறுந்துகிடக்கும் மின்கம்பிகள் அருகில் செல்லாமல், மின்வாரியத்திற்கு தகவல் அளிக்கவேண்டும். ஈரமான கைகளில் ஸ்விட்ச்சை தொடக்கூடாது. கால்நடைகளை மின்கம்பிகளை கட்டுவதையும் தவிர்க்கவேண்டும். உலோக கம்பிகளை மின்சாதன பொருட்கள் அருகில் கொண்டு செல்லக்கூடாது. மின் தடை ஏற்படின், 94987-94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ