375 பவுன் நகைகள் பறித்தபெண் இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்கு:லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
கோவை:கடலுார் மாவட்டம் செம்மண்டலத்தை சேர்ந்தவர் சித்ரா. இவர், 2016ம் ஆண்டு கோவை, பி.என்.பாளையத்தில் குடியிருந்தார். அப்போது இவர் மீது பாலமுருகன் என்பவர், மோசடி புகார் கொடுத்தார்.கோவை மாநகர குற்றப்பிரிவில் வழக்கு பதியப்பட்டது. இவ்வழக்கை அப்போதைய சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர், மல்லிகா, மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலையரசி ஆகியோர் விசாரித்தனர். இவ்வழக்கு நிலுவையில் இருக்கும் போது, 2018ம் ஆண்டு, சித்ரா, இன்ஸ்பெக்டர்கள் மல்லிகா, கலையரசி மீது, லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் ஒன்றை தெரிவித்தார்.பாலமுருகன் புகாரின் பேரில் சித்ரா, அவரது மகளையும் விசாரணைக்கு அழைத்து துன்புறுத்தியதாகவும், வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் கேட்டதாகவும் தெரிவித்திருந்தார். அவரது வீட்டில் இருந்த, 375 பவுன் நகைகள், சொத்து பத்திரங்கள், நிறுவன பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் கூறப்பட்டிருந்தது.லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி விசாரித்து வருகிறார்.இந்நிலையில்இன்ஸ்பெக்டர்கள், மல்லிகா, கலையரசி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர். தற்போது மல்லிகா, திருப்பூர் மாநகர எஸ்.பி.சி.டி., இன்ஸ்பெக்டராகவும், கலையரசி விழுப்புரம் மாவட்டம், கிழியனுார் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராகவும் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.