41 அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.116.55 கோடி நிதி தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு
பொள்ளாச்சி:தமிழகத்தில், 41 அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த, 116.55 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.அரசு மருத்துவமனைகளை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். அந்தந்த மாநில நிதியை கொண்டும், மத்திய அரசின் நிதியிலும் கட்டமைப்பு, உபகரணங்கள் என பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. மாநிலங்களில், சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, 2025 - 26ம் நிதியாண்டுக்கான 15வது நிதிக்குழு சுகாதார மானியங்களின் கீழ், மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.அதில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளுக்கும் தேவையான நிதி கணக்கீடப்பட்டு, மொத்தம், 116.55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆறு மருத்துவமனைகள், திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு, திருவள்ளுர், துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தலா 3 மருத்துவமனைகள்; சேலம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, திருவாரூர், நாகபட்டிணம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா, இரண்டு மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மயிலாடுதுறை, நாமக்கல், ராணிப்பேட்டை, கோவை (வேட்டைக்காரன்புதுார் மருத்துவமனை, 3.5 கோடி ரூபாய்), தென்காசி, சிவகங்கை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், தலா ஒரு மருத்துவமனை என, மொத்தம், 41 மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இப்பணிகளை, 'நேஷனல் ெஹல்த் மிஷன்' வாயிலாக, பொதுப்பணித்துறையால் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது, என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.