கோவை: கோவை, லாலி ரோடு சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை நில அளவீடு செய்து, புதிதாக வரைபடம் தயாரித்து வருகிறது. கோவை ஆர்.எஸ்.புரம் கவுலி பிரவுன் ரோடு, மருதமலை ரோடு, தடாகம் ரோடு ஆகியவை லாலி ரோடு சிக்னலில் சந்திக்கின்றன. கவுலி பிரவுன் ரோட்டில் உழவர் சந்தை செயல்படுகிறது. ஆர்.எஸ்.புரம் செல்வதற்கும் முக்கிய வழித்தடம். இந்த ரோட்டில் ஏராளமான மருத்துவமனைகள் இருக்கின்றன. அதனால், மருதமலை ரோட்டில் இருந்து கவுலி பிரவுன் ரோட்டுக்கு ஏராளமான வாகனங்கள் செல்வதால், லாலி ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மாநில நெடுஞ்சாலைத்துறைஆய்வு செய்து, நிலம் கையகப்படுத்தி, மேம்பாலம் கட்டுவதற்கு ரூ.120 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரித்தது. தற்காலிக தீர்வாக அவ்விடத்தில் 'யூ டேர்ன்' வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரம், மேம்பாலம் கட்டும் திட்டம் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால், மருதமலை ரோட்டில் இருந்து மேட்டுப்பாளையம் ரோடு வரை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் நில அளவீடு செய்தனர். பாப்பநாயக்கன்புதுாரில்இருந்து கவுலி பிரவுன் ரோடு கடந்து மேட்டுப்பாளையம் ரோடு இணையும் பகுதி வரை நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு, வனத்துறை வளாகத்தில் உள்ள குடியிருப்புகளில் ஒரு பகுதி என, ஏராளமான கட்டடங்களை இடித்து இழப்பீடு வழங்கி, கையகப்படுத்த வேண்டும். வேளாண் பல்கலை, வனத்துறை மற்றும் அரசு பொறியியல் கல்லுாரிகளுக்கு சொந்தமான இடங்களையும் நில வகை மாற்றம் செய்து கையகப்படுத்த வேண்டியிருக்கிறது. ஏராளமான கட்டடங்களை இடிக்க வேண்டிய சூழல் வருவதால், சாயிபாபா காலனியில் கட்டுவது போல், 1,200 மீட்டர் நீளத்துக்கு, 13 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி, எத்தனை துாண்கள் அமைக்க வேண்டும்; எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டும் என கணக்கிட்டு, புதிய வரைபடம் தயாரித்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மேட்டுப்பாளையம் ரோடு பிரிவில் இருந்து பாப்பநாயக்கன்புதுார் வரை 3,400 மீட்டர் நீளத்துக்கு சாலை விரிவாக்கம் செய்து, லாலி ரோடு சந்திப்பில் மேம்பாலம் கட்டும் வகையில் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது. அவ்வாறு செய்தால் ஏராளமான கட்டடங்களை இடித்து நிலம் கையகப்படுத்த பெரிய அளவில் தொகை செலவிட வேண்டும். அதனால், லாலி ரோடு சந்திப்பு மட்டும் 1,200 மீட்டர் நீளத்துக்கு மட்டும் மேம்பாலம் கட்டலாம் என ஆலோசிக்கப்பட்டு உள்ளது. 372 சதுர மீட்டர் மட்டும் நிலம் கையகப்படுத்த வேண்டும். நில அளவீடு செய்து மதிப்பீடு தயாரித்துள்ளோம். எதிர்கால வாகன போக்குவரத்தை கணக்கிட்டு, ஆனைகட்டி ரோட்டுக்கும், காந்திபார்க் ரோட்டுக்கும் செல்லும் வகையில் இறங்கு தளங்கள் கட்டவும் ஆலோசிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதை தவிர்ப்பதால், திட்ட மதிப்பீடு குறைய வாய்ப்பிருக்கிறது. வரைபடம் மற்றும் திட்ட அறிக்கை தயாரித்து வருகிறோம் . இவ்வாறு அவர்கள் கூறினர்.