மூதாட்டியிடம் நுாதன மோசடி; 4 பேர் மீது குற்றப்பத்திரிகை
கோவை; 90 வயது மூதாட்டியிடம் நுாதன மோசடி செய்த நான்கு பேர் மீது, கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.கோவை, விளாங்குறிச்சி, காஞ்சி நகரை சேர்ந்தவர் ரகுபதி தேவி,90. காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டிலுள்ள இவருக்கு சொந்தமான மூன்று கடைகளை, வாடகைக்கு விட்டிருந்தார். பின்னர் அவர்களை காலி செய்ய வைத்து கடைகளை பூட்டி வைத்தார்.இந்நிலையில், ரகுபதி தேவி வங்கி கணக்கிற்கு மாதம்தோறும், தெரியாத வங்கி கணக்கிலிருந்து பணம் வந்தது. கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.விசாரணையில்,வாட்ச் கடை உரிமையாளர் முகமது இஸ்மாயில், மற்றும் பால்ராஜன், ராஜன், ராஜேந்திரன் ஆகியோர் ரகுபதி தேவிக்கு சொந்தமான கடையில் வாடகைக்கு இருப்பது போல, போலி ஒப்பந்தம் தயாரித்து, வாடகை பணம் அனுப்பி, கடையை அபகரிக்க முயன்றது தெரிய வந்தது.நான்கு பேர் மீதும், மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து, எப்.ஐ.ஆரை ரத்து செய்ய உத்தரவு பெற்றனர்.இதை எதிர்த்து ரகுபதி தேவி, ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். விசாரித்த ஐகோர்ட், மறு விசாரணை நடத்தி, கீழ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.அதன் பேரில், குற்றப்பிரிவு போலீசார் மறு விசாரணை நடத்தி, நான்கு பேர் மீதும், கோவை ஜே.எம்:7, கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.