கேக் ருசிக்கும் முன் பேக்கிங் விவரத்தை பாருங்க
கோவை: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, ஓட்டல்கள், பேக்கரிகளில் கேக் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. கேக் தயாரித்து விற்பனை செய்வோர், மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்திடம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,) உரிமம் பெற்றிருப்பது அவசியம். கேக் தயாரிக்க பயன்படும் மைதா, சர்க்கரை, நெய், முட்டை மற்றும் உலர் பழங்கள் அனைத்தும் காலாவதியாகாத, தரமான பொருட்களாக இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறமிகளை மட்டுமே, 100 பி.பி.எம்., என்ற நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் பயன்படுத்த வேண்டும். கேக் தயாரிக்கும் இடம் சுத்தமாகவும், பணியாளர்கள் கட்டாயம் தலைக்கவசம், கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பாத்திரங்கள், ஓவன்கள் மற்றும் மேசைகள் தினமும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். முட்டைகளை உடைப்பதற்கு முன் கழுவ வேண்டும். அழுகிய அல்லது விரிசல் விழுந்த முட்டைகளை பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ கேக் லேபிளிங் மற்றும் பேக்கிங்கில் சில அடிப்படை விபரங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டுமென, ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிமம் எண், லோகோ, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, சேர்க்கப்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்கள் இருப்பின் அதுசார்ந்த குறிப்பு கட்டாயம் இடம்பெற வேண்டும். முட்டை சேர்க்கப்படாத சைவ கேக் என்பதை குறிப்பிட பச்சை நிற புள்ளியும், முட்டை சேர்க்கப்பட்டிருந்தால் பழுப்பு நிற புள்ளியும் பேக்கிங்கில் இடம்பெற வேண்டும். கிரீம் கேக் வகைகளை, 4– 5 டிகிரி செல்சியஸ் குளிரூட்டப்பட்ட வெப்பநிலையில் மட்டுமே வைத்து விற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் இல்லாத கேக்குகள் விற்கப்பட்டால், பொதுமக்கள் 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது gmail.comஎன்ற இ–மெயில் முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம்’ என்றனர்.