உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அவிநாசி ரோடு 10 கி.மீ. மேம்பாலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

அவிநாசி ரோடு 10 கி.மீ. மேம்பாலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

கோவை: ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்ட கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். உப்பிலிபாளையம் முதல் நீலாம்பூர் வரையிலான, 16 கி.மீ. துாரம் நிலவிய போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கிய வேலைகள், தி.மு.க. ஆட்சியில் முடிக்கப்பட்டுள்ளது. ரூ.1,791.23 கோடியில் அமைந்துள்ள மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, பாலத்தில் பயணித்தார். பாலத்துக்கான கல்வெட்டை, முதல்வரும், ஜி.டி.நாயுடு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபாலும் இணைந்து திறந்து வைத்தனர். அமைச்சர்கள் வேலு, முத்துசாமி, சாமிநாதன், அன்பரசன், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, நெடுஞ்சாலைத்துறை செயலர் செல்வராஜ், கலெக்டர் பவன்குமார், பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் பாலசுப்ரமணியன், கே.ஜி. மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், கிருஷ்ணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல்வர் சென்ற பின், 25 நிமிடங்களுக்கு பிறகு மேம்பாலத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. மழை, வெயில் பாராமல் மேம்பால கட்டுமான பணியில் ஈடுபட்ட பொறியாளர்கள் பாலத்தில் நின்று படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இது தாங்க ரூட்!

கோல்டுவின்ஸ் பகுதியில் மேம்பாலம் துவங்குகிறது. பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி முன் அமைந்துள்ள ஏறுதளத்தில் விமான நிலையம் மற்றும் காளப்பட்டியில் இருந்து வருவோர் ஏறலாம். இரண்டாவது ஏறு தளம் பன்மால் கடந்ததும் அமைந்திருக்கிறது. டைடல் பார்க், சிங்காநல்லுார் மற்றும் விளாங்குறிச்சி ரோட்டில் இருந்து வருவோர் பயன்படுத்தலாம். முதல் இறங்கு தளம் சுகுணா கல்யாண மண்டபத்தை கடந்து அமைந்துள்ளது. இதில் இறங்கினால், நவ இந்தியா சந்திப்பு மற்றும் லட்சுமி மில்ஸ் சந்திப்புக்கு செல்லலாம். இரண்டாவது இறங்கு தளம் ஜி.டி. மியூசியம் முன் அமைந்திருக்கிறது. இங்கு இறங்கினால், அண்ணாதுரை சிலை சந்திப்பு, வ.உ.சி. பூங்கா சந்திப்புக்கு செல்லலாம். உப்பிலிபாளையத்தில் இருந்து பயணிப்போர் இறங்குவதற்கு ஏற்ற வகையில், பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் அருகேயும், அரவிந்த் கண் மருத்துவமனை முன்பும் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள இறங்கு தளத்தில் இறங்கினால் சிங்காநல்லுார், விளாங்குறிச்சி, டைடல் பார்க் செல்லலாம். அரவிந்த் கண் மருத்துவமனை முன் இறங்கினால், விமான நிலையத்துக்கும், காளப்பட்டி ரோட்டுக்கும் செல்லலாம். பி.ஆர்.எஸ். அருகே ஏறுதளம் அமைக்கும் பணி முடியவில்லை. இரண்டாவது ஏறுதளம் பீளமேட்டில் அமைந்துள்ளது. லட்சுமி மில்ஸ் சந்திப்பு மற்றும் நவஇந்தியா சந்திப்பில் இருந்து வருவோர் இவ்வழியை பயன்படுத்தலாம். கோல்டுவின்ஸ் பகுதியில் ஏறி உப்பிலிபாளையத்தில் இறங்கினால், கலெக்டர் அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட நகரின் இதர பகுதிக்குச் செல்லலாம். அவிநாசி, திருப்பூர், ஈரோடு, சேலம் செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், மேம்பாலத்தில் 10 நிமிட பயணத்தில் கோல்டுவின்ஸ் சென்றடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ