முதல்வர் கவனத்துக்கு... மஞ்சள் பை இயந்திரங்கள் சரியாக செயல்படுவதில்லை
வீதிகளில் துாக்கி எறியப்படும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர் மற்றும் டம்ளர்கள் உள்ளிட்டவை நீர்நிலைகள் மற்றும் வடிகால்களில் அடைத்துக் கொள்வதால், ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கிறது. அவற்றின் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடை செய்திருந்தாலும், அதிகாரிகள் அக்கறையோடு நடவடிக்கை எடுக்காத காரணத்தால், ஓட்டல், மெஸ், பேக்கரி, காய்கறி, பழம் மற்றும் பூ மார்க்கெட்டுகள், வாரச்சந்தைகள் உள்ளிட்டவற்றில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து விட்டது.இதற்கு பதிலாக, 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கினார். உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக பல இடங்களில் இலவசமாக மஞ்சப்பை வழங்கப்பட்டது. பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் ரூ.10 செலுத்தினால் மஞ்சள் பை பெறும் வகையில் தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்பட்டன. அவை சரியாக செயல்படுவதில்லை; அதிகாரிகள் கண்காணிப்பதும் இல்லை. அதனால், மஞ்சப்பை பயன்படுத்தும் பழக்கம் மக்களிடம் இல்லை; எங்கு பார்த்தாலும் சர்வ சாதாரணமாக பிளாஸ்டிக் கவர்களில் பொருட்கள் வழங்கப்படுகின்றன.