மெய்யழகன் படத்தில் மிரட்டிய சோழன்!
'96' திரைப்பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில், கார்த்தி - அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான 'மெய்யழகன்' திரைப்படம், அனைவரையும் பேச வைத்திருக்கிறது. இதில், முக்கிய கதாபாத்திரமாக மிரட்டியுள்ள காளை தான், இப்போது ஹாட் டாபிக்!சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா, முனியம்பட்டி பகுதியை சேர்ந்த சங்கர் கணேஷ், இவரது சகோதரர் சிவசங்கர் ஆகியோர் பராமரித்து வரும் காளைகளில் ஒன்று தான், 'மெய்யழகன்' திரைப்படத்தில், நடிகர் கார்த்தியுடன் சோழன் ஆக கலக்கியுள்ளது. சமூக வலைதளத்தில் காளைகளை பார்த்த, இயக்குனர் பிரேம்குமார் உதவியாளர் அருள் இதைப் பார்த்து, சங்கர் கணேஷ், சிவசங்கர் ஆகியோரை தொடர்பு கொண்டுள்ளார். இதோ இப்போது கலக்கி வருகிறது காளை.தற்போது கோவையில் இருக்கும் சங்கர் கணேஷ் கூறும் போது, ''காரைக்குடி மாவட்டம் சிராவயல் பகுதியில் நடந்த படப்படிப்பில், எங்கள் சோழன் காளை பங்கேற்றது. அங்குள்ள ஏரியில், நடிகர் கார்த்தி, காளையை குளிப்பாட்டுவது, புல்லட்டில் செல்லும் போது கூடவே பயணிப்பது போன்ற காட்சிகளை, 25 நாட்களுக்கு படமாக்கினார்கள். ஐந்து அல்லது ஆறு காட்சிகளில், காளையுடன், நடிகர் கார்த்தி பயணிப்பது போல் இருக்கும். திரைப்படத்தில், எங்கள் காளையை பார்ப்பது, மிகப்பெரிய பேறு,'' என்றார்.