உள்ளூர் செய்திகள்

சிட்டி கிரைம்

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த ஐந்து பேர் கைது

கோவை, தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் 30 வயது பெண். இவர் கணவரை பிரிந்து யோகநாத் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். யோகநாத் சுண்டக்காமுத்தூரில் உள்ள நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். உடல்நலக்குறைவால், பணியை விடுத்தார். நேற்று முன்தினம், பெண் வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது அங்கு வந்த ஐந்து பேர் பெண்ணிடம், யோகநாத்தை வேலைக்கு அனுப்பும் படியும், இல்லையெனில், போலீசில் திருட்டு புகார் அளிக்கப்படும் எனவும் கூறி, தகராறில் ஈடுபட்டனர். யோகநாத்திற்கு உடல்நலக்குறைவால் பணிக்கு வர இயலாது என, பெண் தெரிவித்தார்.ஆத்திரமடைந்த அந்நபர்கள், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்தனர். புகாரின்பேரில் வழக்கு பதிந்த செல்வபுரம் போலீசார் நடத்திய விசாரணையில், பெண்ணை மிரட்டியது ஈரோட்டை சேர்ந்த ராமச்சந்திரன், 47, பிரபு, கரூரை சேர்ந்த சிவராஜ், 43, கோவை மதுக்கரை கார்த்திகேயன், 52, சுண்டக்காமுத்தூரை சேர்ந்த ஜெகதீஸ், 45 எனத் தெரிந்தது. போலீசார் அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

கணவரை சேர்த்து வைக்காத மாமனார், மாமியாருக்கு மிரட்டல்

கோவை, பீளமேடு பி.ஆர்.பி., கார்டனை சேர்ந்தவர் சற்குணம். இவர் திவ்யா என்ற பெண்ணை, 2018ம் ஆண்டு திருமணம் செய்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின், கீரணத்தத்தில் குடியேறினர். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சற்குணம், திவ்யாவை பிரிந்து, விவாகரத்து கோரி கோர்ட்டில், மனு தாக்கல் செய்தார்.ஆனால், திவ்யா விவாகரத்துக்கு சம்மதிக்காமல், சேர்ந்து வாழ வலியுறுத்தினார். அதற்கு, சற்குணம் மறுத்து வந்தார். சில தினங்களுக்கு முன், திவ்யா தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆறு பேருடன், மாமனார் நீலமேகம் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் இல்லாததால், வீட்டின் கதவை உடைத்து சேதப்படுத்தினார். இதுகுறித்து கேட்ட நீலமேகத்தை, திவ்யா தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்தார்.நீலமேகம் புகாரின் பேரில், பீளமேடு போலீசார் திவ்யா, ஜெயந்தி, ஹரிஹரன், ஜெயபிரகாஷ், கலையரசி, கண்ணன் ஆகியோர் மீது, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

பாக்கியை கேட்டதால் ஆத்திரம் மீன் வியாபாரியின் பல் உடைப்பு

கோவை, ரத்தினபுரி அருணா வீதியை சேர்ந்தவர் கணபதி, 38. காந்திபுரம், 9வது வீதியில் தள்ளுவண்டியில் மீன் சில்லி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவருக்கு ஏற்கனவே அறிமுகமான டாடாபாத், டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டை சேர்ந்த சஜீர், 28 கடைக்கு வந்தார். கணபதியிடம் மீன் சில்லி கேட்டார். ஏற்கனவே உள்ள பாக்கி ரூ.80 தரும்படி கணபதி கேட்டார்.ஆத்திரமடைந்த சஜீர், தகாத வார்த்தைகளால் திட்டி, தள்ளு வண்டியை தள்ளி விட்டு, தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த சஜீரின் அண்ணன் காதர் செரிப், 30 என்பவரும், அவருடன் சேர்ந்து கணபதியை தாக்கினர்.இதில் அவரது, 2 பற்கள் உடைந்தன. காயம் அடைந்த கணபதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிந்து சஜூர், காதர்செரிப்பை சிறையில் அடைத்தனர்.

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது

கோவை, சரவணம்பட்டி கார்த்திக் நகரை சேர்ந்தவர் சங்கர், 44. தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்கிறார். நேற்று முன்தினம், கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மூவர், கத்தியை காட்டி மிரட்டி, ரூ.900 பறித்தனர். சங்கர் சத்தமிட்டதை தொடர்ந்து, அருகிலிருந்தவர்கள் அங்கு வந்தனர்.இதையடுத்து மூவரும், அங்கிருந்து தப்பினர். சங்கர் புகாரையடுத்து, சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், சங்கரிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்தது கணபதி கபிலன், 20, ரத்தினபுரி லோகேஷ், 21 மற்றும் அருள்குமார் எனத் தெரிந்து. போலீசார் கபிலன், லோகேஷ் ஆகியோரை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அருள்குமாரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ