சிட்டி கிரைம் செய்திகள்
பணம் கேட்டு வழிப்பறி செய்தவருக்கு சிறை
சவுரிபாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் சரத்குமார், 33; தனியார் நிறுவன ஊழியர். கடந்த 7ம் தேதி இரவு 10:00 மணிக்கு பணி முடிந்து, சிங்காநல்லுார் -- வெள்ளலூர் ரோட்டில் பைக்கில் வீடு திரும்பினார். அப்போது அவரை வழிமறித்த நபர் ஒருவர், மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினார். பணம் கொடுக்க மறுத்ததால், கத்தியை காட்டி, பாக்கெட்டில் இருந்த ரூ. 1500ஐ பறித்து சென்றார். சரத்குமார் சிங்காநல்லுார் போலீசில் புகார் அளிக்க, போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட, சிங்காநல்லுாரை சேர்ந்த மாரிமுத்து, 37 என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். பார் சப்ளையரை தாக்கிய மூவருக்கு சிறை
பீளமேடு, தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள பாரில், பணியாற்றி வருபவர் இளையராஜா, 38. கடந்த 7ம் தேதி, இரவு மூவர் இளையராஜா பணியாற்றும் பாருக்கு மது குடிக்க வந்தனர். 11:15 மணி வரை அவர்கள் மது அருந்திக்கொண்டு இருந்ததால், அவர்களை வேகமாக குடித்து விட்டு செல்லுமாறு இளையராஜா கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அவர்கள், மதுபோதையில் பீர் பாட்டிலை எடுத்து இளையராஜா தலையில் அடித்தனர். தடுக்க வந்த அவரின் நண்பரான ராஜசேகரனையும் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். சம்பவம் குறித்து, இளையராஜா பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, பார் சப்ளையர்களை தாக்கியது ஆவாரம்பாளையத்தை சேர்ந்த ஜெகதீஸ், 23, பீளமேட்டை சேர்ந்த சக்தி குமார், 23, அருண், 24 ஆகியோர் என்பது தெரியவந்தது. மூவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். முந்திரி வாங்கிவிட்டு பணம் தராமல் ரகளை
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா, 34; காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பாதாம், முந்திரி உள்ளிட்ட நட்ஸ் விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் கடைக்கு வந்த இருவர் பாதாம், முந்திரி வாங்கினர். அதற்கு ராஜா பணம் கேட்டபோது அவரிடம் ரகளை செய்து , கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து சென்றனர்.இதுகுறித்து ராஜா காட்டூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, ரவுடி என கூறி மிரட்டல் விடுத்த, ரத்தினபுரியை சேர்ந்த நந்தகுமார், 24, இடிகரையை சேர்ந்த ஜெயபிரசாந்த், 24 ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.