உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிட்டி கிரைம் செய்திகள்

சிட்டி கிரைம் செய்திகள்

லாட்டரி விற்றவர் கைது

துடியலுார் பகுதியில் கேரளா லாட்டரி டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. துடியலுார் போலீசார் வடமதுரை பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்த போது, அவர் அதே பகுதியை சேர்ந்த கலா, 52 என்பதும் கேரளா லாட்டரி டிக்கெட்களை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. கலாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து, 62 லாட்டரி டிக்கெட்கள், ரூ.7,400 பணம் பறிமுதல் செய்தனர்.

விபச்சாரத்தில் ஈடுபட்ட மூவர் கைது

சங்கனுார் மார்க்கெட் அருகில் குடியிருந்து வருபவர் ஸ்ரீநிவாசன், 40. இவர் வரதா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவரிடம் வந்த இருவர், தங்களிடம் அழகிய பெண் இருப்பதாக கூறி விபச்சாரத்திற்கு அழைத்துள்ளனர். அவர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வரதா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, அங்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த நுாதி சர்தார், 27 என்பவர், விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்தது. போலீசார், விபச்சாரத்தில் ஈடுபட்ட பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஜெயந்த்குமார், 28, சிவகங்கையை சேர்ந்த ஆனந்தகுமார், 33 மற்றும் நுாதி சர்தார் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

கஞ்சா விற்றவர் கைது

சிங்காநல்லுார் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இப்போது, எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பழைய ரயில்வே குடியிருப்பு பகுதியில் ஒருவர், ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த லோகநாதன், 42 என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த 1.100 கிலோ கஞ்சா, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். லோகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வைர நகைகள் திருட்டு

கணபதியை சேர்ந்தவர் ஜெயவர்தன், 29. ஜெயவர்தன் வீட்டு படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த வைர பிரேஸ்லெட், வைர கம்மல் மற்றும் ரூ.80 ஆயிரம் பணம் காணாமல் போனது. அவர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது, அவரது வீட்டில் வேலை செய்து வந்த புதுக்கோட்டையை சேர்ந்த சரண்யா,19 நகை, பணம் திருடியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

8 கிலோ குட்கா பறிமுதல்

கவுண்டம்பாளையம், சங்கனுார் ரோடு டாஸ்மாக் மதுக்கடை அருகில் உள்ள பெட்டிக்கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 கிலோ குட்கா பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்து, விற்பனை செய்து வந்த புதுக்கோட்டையை சேர்ந்த பாண்டிதுரை, 39 என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி