நகரின் அடுத்தகட்ட வளர்ச்சி தீபாவளிக்குப் பின் ஆலோசனை
கோவை : இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்க்கிடெக்ட்ஸ் (ஐ.ஐ.ஏ.,) கோவை மையம் சார்பில், கோவை அவிநாசி சாலையில் உள்ள கஸ்துாரி ஸ்ரீனிவாசன் அரங்கத்தில், இரண்டு நாட்கள் கட்டடக் கலை கண்காட்சி நடந்தது. துவக்க நிகழ்வில் பேசிய, ஐ.ஐ.ஏ., கோவை மைய தலைவர் ஜெயகுமார், ''நாளைய நகரங்களை வடிவமைப்பதில், எங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். எங்களிடம் திறமையான வல்லுனர்கள் உள்ளனர்,'' என்றார்.சிறப்பு விருந்தினர் எம்.பி., ராஜ்குமார் பேசுகையில், ''நகரின் அடுத்தகட்ட வளர்ச்சி பணிகள் குறித்து, ஆர்க்கிடெக்ட் சங்கம் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து ஆலோசிக்க, தீபாவளிக்குப் பின், ஒரு கூட்டம் நடத்தப்படும்,'' என்றார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கோவை இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ராஜேஷ் லுந்த், ஐ.ஐ.ஏ., தமிழக தலைவர் சந்திரநேசன், தேசிய விருது பெற்ற கட்டடக் கலைஞர்கள் சுஹாசினி, விக்ரம் சிங் ரத்தோர் ஆகியோர் பேசினர்.சிறந்த நகரங்களை வடிவமைப்பது குறித்த யோசனைகளை தெரிவித்த, தொழில்முறை கட்டடக் கலைஞர்கள், கட்டடக்கலை மாணவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது.