சட்ட விரோதமாக செயல்பட்டதாக 72 ஸ்பா, மசாஜ் சென்டர்கள் மூடல்
கோவை : கோவை மாநகர் பகுதிகளில் அங்கீகாரம் இல்லாமல், சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 72 மசாஜ் சென்டர்கள் மூடப்பட்டன.வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து பெண்களை அழைத்து வந்து, கோவையில் விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக சிக்கந்தர் பாஷா, ஸ்டீபன் ஆகியோரை போலீசார் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில் கோவையில் பல்வேறு மசாஜ் சென்டர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அதன் வாயிலாக விபச்சாரம் செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, போலீசார் மசாஜ் சென்டர்களில் நடக்கும் சட்ட விரோத செயல்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்தாண்டில் மட்டும் தற்போது வரை, 72 மசாஜ் சென்டர்கள் மூடப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.இது தொடர்பாக, துணை கமிஷனர் ஸ்டாலினிடம் கேட்டபோது, ''வெவ்வேறு மாநிலங்களில் இருந்தபடி, வாட்ஸ் ஆப் வாயிலாக இங்கு விபச்சாரம் செய்கின்றனர். அவர்களை தொடர்பு கொள்வோருக்கு புகைப்படங்களை அனுப்புகின்றனர். அவர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் பெண்களை அனுப்புகின்றனர்.ஸ்பா, மசாஜ் சென்டர்களில் 'சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும், மறைவாக அறையில் மசாஜ் சேவை அளிக்கக்கூடாது' போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றை மீறும் சென்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாநகராட்சி சுகாதாரத்துறை மற்றும் போலீசில் இருந்து முறையாக அனுமதி பெறாத ஸ்பா, மசாஜ் சென்டர்கள் மற்றும் விதியை மீறும் சென்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என்றார்.