தென்னை சாகுபடியில் புதுப்பித்தல் திட்டம்; தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அழைப்பு
ஆனைமலை; தென்னை வளர்ச்சி வாரியத்தின், தென்னை மரங்கள் புதுப்பித்தல் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம், என, உதவி இயக்குனர் தெரிவித்தார்.ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் அறிக்கை வருமாறு:ஆனைமலை வட்டாரத்தில், 23 ஆயிரம் ெஹக்டேர் பரப்பில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. தற்போது நிலவும் வேர் வாடல் நோயானது அதிகரித்து வருவதால், விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.தென்னை வேர்வாடல் நோயானது அனைத்து வயது தென்னை மரங்கள், வீரிய ஒட்டு ரக மற்றும் நெட்டை ரக மரங்களிலும் காணப்படுகின்றது. இந்நோய் முற்றிய நிலையில், 85 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்படுத்துகிறது.ஆரம்ப நிலையில், நோயினை கண்டறிதல் கடினமாகும். எவ்வித காரணமும் இன்றி அதிகளவில் குப்பைகள் உதிர்தல், இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, இலை மடல்களின் ஓரங்கள் கருகி கீழ்நோக்கி வளைந்து காணப்படும்.இந்நோயானது, இளங்குருத்து பகுதியை தாக்கி, குருத்துப்பகுதியை அழுக செய்யும். குருத்துக்களில் இலை அழுகல் அறிகுறிகள் தென்படும். பாதிக்கப்பட்ட இலைகளில் வெறும் குச்சிகள் மட்டும் காணப்படும். பூங்கொத்து கருகுதல், வேர் அழுகுதல் ஆகியவை இவற்றின் முக்கிய அறிகுறிகளாகும்.இந்நோய், பிற மரங்களுக்கு பரவுதலை தடுக்க ஆண்டுக்கு, 10 காய்களுக்கும் குறைவாக அல்லது காய்கள் இல்லாத நோயுற்ற மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.நன்றாக வடிகால் வசதி செய்து, பசுந்தாள் உரங்களான தட்டை பயிர், சணப்பை, தக்கைப்பூண்டு, கலப்ப கோனியம் மற்றும் பியூரேரியோ விதைத்து பூக்கும் முன் உர மேலாண்மையை தவறாமல் பின்பற்ற வேண்டும்.தென்னை மரம் ஒன்றுக்கும், தொழு உரம், 50 கிலோ, வேப்பம் புண்ணாக்கு ஐந்து கிலோ, யூரியா 1.5 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 3.5 கிலோ, டிரைக்கோடெர்மா 200 கிராம், பேசில்லஸ் சப்டிலிஸ் 200 கிராம், வேர் பூஞ்சாணம் 50 கிலோ ஆகியவை ஆண்டுக்கு இரண்டு முறை பிரித்து இட வேண்டும்.இதுபோன்ற மேலாண்மை பயிற்சியினை பின்பற்றும் போது, தென்னை வேர் வாடல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.ஆனைமலை வட்டார தோட்டக்கலைத்துறை வாயிலாக, தென்னை வளர்ச்சி வாரியத்தின் திட்டங்களான, தென்னை மரங்களை புதுப்பித்தல் வாயிலாக பாதிப்படைந்த மரங்களை அகற்ற மானியம், புதிய தென்னங்கன்றுகளும், மரங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உயிர் உரங்களும் வழங்கப்பட உள்ளது.பயனடைய விரும்பும் விவசாயிகள், ஆனைமலை வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவுக்கு சிட்டா அடங்கல், உரிமைச்சான்று, நில வரைபடம், ஆதார் கார்டு நகல், வங்கி சேமிப்பு புத்தக நகல், இரண்டு புகைப்படங்களுடன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.