தென்னை பயிற்சி விளக்க திடல்; விவசாயிகள் பயன்பெற அழைப்பு
ஆனைமலை; 'தோட்டக்கலைத்துறையில், தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் பயிற்சி விளக்க திடல் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது,' என, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் தெரிவித்தார். பொள்ளாச்சி பகுதியில், தென்னையில் வேர்வாடல் நோய் பாதிப்பால், 20 சதவீத மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. கடந்தாண்டு நிலவிய வெயில், தற்போது நிலவும் நோய் தாக்கத்தால், தேங்காய் விளைச்சலும் பாதித்துள்ளது. இதனால், பல ஆண்டு பயிரான தென்னை மரங்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலை, தோட்டக்கலைத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் அறிக்கை வருமாறு: தென்னையில் தற்போது நிலவும் பல தரப்பட்ட பிரச்னைகளில், வாடல் நோய், வெள்ளை ஈக்கள் பிரதானமாக உள்ளது. வாடல்நோய் மற்றும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த விவசாயிகள் ரசாயன பூச்சிக்கொல்லிகளையும், பூஞ்சான கொல்லிகளையும் பயன்படுத்தி வந்தனர். இதனால், கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை வாயிலாக தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், பயிற்சி விளக்கம் திடல் அமைக்கும் திட்டத்தில் ஆனைமலை வட்டாரத்தில் இலக்கு பெறப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில், விவசாயிகளுக்கு தென்னை மரங்களை பாதுகாக்க இயற்கை உரங்கள், நுண்ணுாட்டச்சத்துக்கள், உயிர் உரங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது. தென்னை வளர்ச்சி வாரியத்தின் மற்றொரு திட்டமான மறுநடவு மற்றும் புத்துயிர் திட்டத்திலும் மற்றும் முதல்வரின் வேர்வாடல் நிவாரண திட்டத்திலும் பயனடையாத விவசாயிகள், இத்திட்டத்தில் முன்பதிவு செய்து பயன்பெறலாம். விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களுடைய சிட்டா அடங்கல், உரிமைச்சான்று, வங்கி புத்தக நகல், புகைப்படம், குடும்ப அட்டை நகல் உடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.