கோவை - திண்டுக்கல் மெமு ரயில் சேவை; வரும் 30ம் தேதி வரை நீட்டிப்பால் மகிழ்ச்சி
பொள்ளாச்சி ; கோவையில் இருந்து, பொள்ளாச்சி வழியாக திண்டுக்கலுக்கு இயக்கப்படும், மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை இம்மாதம், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகையையொட்டி, கூட்ட நெரிசலை தவிர்க்க, கோவை - திண்டுக்கல் மெமு எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த மாதம், 30ம் தேதி முதல், 6ம் தேதி (நேற்று) வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.கோவையில் இருந்து மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு முன்பதிவில்லா ரயில் (06106), காலை, 9:35 மணிக்கு கோவையில் இருந்து கிளம்பி, காலை, 10:13 மணிக்கு கிணத்துக்கடவுக்கு வருகிறது.பொள்ளாச்சிக்கு, 11:08 மணிக்கு வந்து, 11:10 மணிக்கு கிளம்புகிறது. உடுமலைக்கு காலை, 11:33 சென்று, 11:34 மணிக்கு கிளம்பி, பழநி, ஒட்டன்சத்திரம் வழியாக மதியம், 1:10 மணிக்கு திண்டுக்கல் சென்றடைகிறது. மறுமார்க்கமாக ரயில் (06107), மதியம், 2:00 மணிக்கு புறப்படுகிறது. பழநிக்கு மதியம், 2:55 மணிக்கு வந்து, மாலை, 3:00 மணிக்கு புறப்படுகிறது.உடுமலைக்கு மாலை, 3:35 மணிக்கு வந்து, 3:36 மணிக்கு புறப்படுகிறது. மாலை,3:18 மணிக்கு பொள்ளாச்சி வந்து, மாலை, 3:20 மணிக்கு கிளம்பி, கிணத்துக்கடவுக்கு 4:43 மணிக்கு சென்றடைகிறது. அங்கு இருந்து, 4:44 மணிக்கு கிளம்பி, போத்தனுாருக்கு, 5:08 மணிக்கு சென்றடைந்து, 5:10 புறப்படுகிறது. மாலை, 5:50 மணிக்கு கோவை சென்றடைகிறது.இந்த ரயில், இன்று, 7ம் தேதி முதல், வரும், 30ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து) இயக்கப்படுகிறது. இதை பயணியர் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென, தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறுகையில், 'கோவை - திண்டுக்கல் மெமு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பழநிக்கு சூரசம்ஹார விழாவையொட்டி செல்லும் பக்தர்களுக்கு பயனாக இருக்கும்.மேலும், பயணியர் இந்த ரயிலை அதிகளவு பயன்படுத்தி நிரந்தர சேவையாக இயக்க துணை நிற்க வேண்டும்,' என்றனர்.