கோவை புத்தகத் திருவிழா; வரும் 18ம் தேதி துவக்கம்
கோவை; கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா சார்பில், 'கோவை புத்தகத் திருவிழா 2025' வரும் 18ம் தேதி துவங்கி, 10 நாட்களுக்கு நடக்கிறது.இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், “ கொடிசியாவில் 9வது கோவை புத்தகத் திருவிழா வரும் 18ம் தேதி துவங்குகிறது. அனுமதி இலவசம். கடந்த முறையைவிட 50 ஸ்டால்கள் அதிகம்;கூடுதலாக ஓர் அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை எதிர்பார்க்கிறோம்,” என்றார்.புத்தக திருவிழா தலைவர் ராஜேஷ் கூறியதாவது:பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 170க்கும் அதிகமான நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றன. 320 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. பல்வேறு மொழிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெறுகின்றன. துவக்க விழாவில், எம்.பி., ராஜ்குமார் பங்கேற்கிறார்.தினமும் கலை, இலக்கிய நிகழ்வுகள், போட்டிகள் நடக்கின்றன. சிறந்த நூலாசியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. கவிஞர் கலாப்ரியாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, எம்.பி., நிதியில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.கண்காட்சி வளாகம் வரை 10 நாட்களும் அரசு பஸ்கள் வந்து திரும்ப மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களை அழைத்து வர, வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.புத்தகத் திருவிழா துணைத் தலைவர் முத்துக்குமார், கொடிசியா துணைத் தலைவர் யுவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.