கோயம்புத்தூர் தடுப்பணை தூர்வாரும் பணி துவக்கம்
பேரூர்: சிறுதுளி அமைப்பு சார்பில், நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள பழமையான கோயம்புத்தூர் தடுப்பணையை தூர்வாரும் பணி துவங்கப்பட்டது. கோவையின் ஜீவ நதியான நொய்யல் ஆற்றின் குறுக்கே, குளங்களுக்கும், குட்டைகளுக்கும் நீர் கொண்டு செல்லும் வகையிலும், தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பேரூர், நொய்யல் ஆற்றின் குறுக்கே பழமையான, தேவி சிறை எனப்படும் கோயம்புத்தூர் தடுப்பணை, பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்தின் அனுமதி பெற்று, சிறுதுளி அமைப்பினர், இத்தடுப்பணையை தூர்வாருவதற்கான துவக்க விழா நேற்று நடந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், சிறுதுளி அமைப்பினர், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிறுதுளி அமைப்பினர் கூறுகையில்,பேரூர் படித்துறை முதல் கோயம்புத்தூர் தடுப்பணை வரையிலான, நொய்யல் ஆற்றின் நீர்வழித்தடத்தையும், தடுப்பணையும் தூர்வாரும் பணி துவங்கப்பட்டுள்ளது. கரையை பலப்படுத்த மரக்கன்றுகள் நடவுள்ளோம்' என்றனர்.