கோவை வரைவு மாஸ்டர் பிளானுக்கு சிக்கல்
கோவை; மாநகராட்சி பகுதியில் உள்ள திட்டச்சாலைகளை, எக்காரணம் கொண்டும் நீக்கவோ அல்லது மாறுதலுக்கு உட்படுத்தவோ கூடாது என, கோவை மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.வரும், 2041ல் மக்கள் தொகையை கணக்கிட்டு, கோவைக்கான வரைவு 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு, பிப்., 11ல் வெளியிடப்பட்டது. ஆட்சேபனை மற்றும் ஆலோசனை தெரிவிக்க, அவகாசம் அளிக்கப்பட்டது. பொதுமக்கள், விவசாயிகள், தொழில்துறையினர் மற்றும் கட்டுமான துறையினர், தன்னார்வ பொது நல அமைப்பினர் உள்ளிட்ட, பல்வேறு தரப்பில் இருந்து, 3,500 மனுக்கள் வழங்கப்பட்டன. அவற்றை, நகர ஊரமைப்பு துறையினர் பரிசீலித்து வருகின்றனர். நவ., இறுதியில் தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப, திட்டமிடப்பட்டு இருந்தது; இன்னும் பரிசீலனை முடியாததால், இரு வாரங்களாகும் என நகர ஊரமைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.இச்சூழலில், கட்டுமானத் துறையினர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் கொடுத்த கோரிக்கையை ஏற்று, உத்தேசித்துள்ள திட்டச்சாலைகளை பட்டியலில் இருந்து நீக்கவும், மாறுதலுக்கு உட்படுத்தவும், நகர ஊரமைப்புத்துறையினர் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு, கோவை மாநகராட்சி வடக்கு மண்டல கவுன்சிலர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.'சரவணம்பட்டி, சின்ன வேடம்பட்டி, கணபதி, விளாங்குறிச்சி, சங்கனுார், கிருஷ்ணராயபுரம், துடியலுார், வெள்ளக்கிணறு, சவுரிபாளையம் கிராமங்களில், நகர ஊரமைப்புத்துறை மூலம் உத்தேசிக்கப்பட்டுள்ள, திட்டச்சாலைகளை மாறுதலுக்கு உட்படுத்தவோ, நீக்கவோ கூடாது. வருங்காலங்களில் 'மெட்ரோ ரயில்' திட்டம் செயல்படுத்த உத்தேசித்துள்ளதால், போக்குவரத்து இடையூறை தவிர்க்க, இப்பகுதிகளில் உள்ள திட்டச்சாலைகள் பெரும் பங்கு வகிக்கும்' என, மாநகராட்சி மண்டல கூட்டத்தில், சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
'திட்ட சாலைகளை நீக்க அனுமதிக்க மாட்டோம்'
வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மண்டல கூட்டத்தில் பேசுகையில், ''வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள திட்டச்சாலைகளை, எக்காரணத்துக்காகவும் நீக்குவதை அனுமதிக்க மாட்டோம். சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி, மாநகராட்சி கமிஷனர் மூலமாக நகர ஊரமைப்புத்துறைக்கு கடிதம் அனுப்பப்படும். திட்டச்சாலைகளின் பயன்பாட்டை மாற்றுவது, பொதுமக்களை வெகுவாக பாதிக்கும். அனைத்து திட்டச்சாலைகளையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,'' என்றார்.