இரும்புப்பொருள் மீதான இறக்குமதி வரி உயர்வைக் கைவிட வேண்டும் கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை
கோவை: இரும்புப்பொருள்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்தக் கூடாது என, 23 தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (போசியா), மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக போசியா சார்பில், மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமிக்கு அனுப்பப்பட்டுள்ள மனு:இரும்பு பொருட்களின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படலாம் என்ற தகவல், கோவை குறு, சிறு தொழில் முனைவோரை கவலை அடையச் செய்துள்ளது. இறக்குமதி வரி உயர்த்தப்பட்டால், இரும்புப் பொருட்களின் விலை உயரும். குறு, சிறு தொழில்கள் பெற்ற ஆர்டர்களை நிறைவேற்ற முடியாமல் தவிக்க நேரிடும்.இரும்பு விலை குறைந்துள்ளதால், டெக்ஸ்டைல் உதிரிபாகங்கள் செய்வோருக்கு, ஆர்டர்கள் மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இறக்குமதி வரி உயர்த்தப்பட்டால், தொழில் நலிவடையும்.இத்தருணத்தில், இரும்புப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்கும் முடிவைக் கைவிட வேண்டும். இரும்பு, தாமிரம், அலுமினியம் ஆகிய முக்கியமான மூலப்பொருட்களுக்கு, அதிகபட்ச விற்பனை விலையை, அரசு நிர்ணயிக்க வேண்டும்.இந்த விலைகள் குறைந்தது ஓராண்டுக்கு நிலையாக இருந்தால், குறு, சிறு தொழில்கள் பாதுகாப்பாக செயல்பட முடியும். எங்களின் நீண்டகால கோரிக்கையான, விலை கண்காணிப்புக் கமிட்டியை, குறு சிறு தொழில்அமைப்புகளின் உரிய பிரதிநிதித்துவத்தோடு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.